மகாராஷ்டிராவில் திடீர் அரசியல் மாற்றம் – காங்கிரஸ் கட்சி அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு

மகாராஷ்டிராவில் திடீர் அரசியல் மாற்றம் ஏற்பட்டுளள நிலையில் காங்கிரஸ் கட்சி அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 இடங்கள்,சிவசேனா 56 இடங்கள்,தேசியவாத காங்கிரஸ் 54 இடங்கள்,காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் நீண்ட நாட்களாக ஆட்சியமைப்பது குறித்து சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டு வந்தது.இந்த ஆலோசனையின் விளைவாக இந்த கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இன்று திடீரென்று  பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றார்.மேலும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த அஜித்பவார்  பதவி ஏற்றார்.
இந்த நிகழ்வு காரணமாக மகாராஷ்டிரா அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.யாரும் எதிர்பாராத வகையில் பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறுகையில், அஜித் பவார் முடிவு தனிப்பட்ட முடிவு என்று தெரிவித்தார்.இதனையடுத்து காங்கிரஸ் கட்சி இந்த குழப்பத்திற்கு மத்தியில் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.இந்த கூட்டத்தில்  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அகமது படேல், கே.சி.வேணுகோபால்  உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.