ஆக்ரோஷமாக கரையை கடக்கத் தொடங்கிய நிசர்கா புயல்.. மணிக்கு 110 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்!

அரபிக்கடலில் உருவாகியுள்ள நிசர்கா புயல், தற்பொழுது மும்பையில் உள்ள அலிபாக் அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது. மேலும், 138 ஆண்டுகளுக்கு பின் மும்பையில் புயல் தாக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம், நேற்று மதியம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு வங்கதேசம் “நிகர்சா” என பெயரிட்டது. இந்த நிகர்சா புயல், இன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில், தற்பொழுது அலிபாக் அருகே ஆக்ரோஷமாக கரையை கடக்க தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிசர்கா புயலானது, மும்பையில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள அலிபாக் அருகே கரையை கடக்கும் எனவும், இந்த புயலால் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. 

மும்பை கடலோர பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்புப்பணியில் தயார் நிலையில் உள்ளதாகவும், பொதுமக்கள் வரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மும்பை மாவட்ட காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், 138 ஆண்டுகளுக்கு பின் மும்பையில் புயல் தாக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.