காஷ்மீரில் முக்கிய தலைவர்கள் கைது !காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆலோசனை

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்தது.திடீரென்று அங்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டார்கள்.

இதனையடுத்து  காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.மேலும்  காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .பின்னர் இது தொடர்பான மசோதாக்கள்  மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஏற்கனவே நிறைவேற்றம் செய்யப்பட்டுவிட்டது.

ஆனால் காஷ்மீர் விவகாரத்தில்  முதலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீரின் முக்கிய தலைவர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மக்களவையில் காஷ்மீர்  மசோதா தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் தலைவர்களான உமர் அப்துல்லா ,மெகபூபா முப்தியை நிலைமை என்ன? என்றும் வீட்டுக் காவலில் வைத்துள்ளீர்களா என்பதை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினரான பரூக் அப்துல்லா எங்கே? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்து பேசினார்.ஃபாரூக் அப்துல்லா தனது வீட்டில்தான் இருக்கிறார்.அவர் கைது செய்யப்படவும் இல்லை வீட்டுக் காவலில் இல்லை என்று விளக்கம் அளித்தார்.

பின் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தனது வீட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,என் மாநிலம் எரிந்து கொண்டிருக்கும் போது நான் ஏன் வீட்டில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.மேலும் நான் வீட்டுக் காவலில் இல்லை என்று மக்களவையில் உள்துறை அமைச்சகம் சொல்வது பொய் என்றும் தெரிவித்தார்.

ஆனால் காஷ்மீரில் முக்கிய தலைவர்கள் கைது  செய்யப்பட்ட விவகாரம்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில்  ஸ்ரீநகரில் இன்று  காஷ்மீர் மாநில நிர்வாகிகளுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆலோசனை நடத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.