ரேஞ்ச்ரோவர் எவோக் கன்வெர்ட்டிபிள் கார் இப்போது இந்தியாவிலும்...!!!

Rangerover Evoque Convertible Car Now In India ... !!!

ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவியின் கன்வெர்ட்டிபிள் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் முதல் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி மாடல் என்ற பெருமையுடன் தடம் பதிக்கும் இந்த புதிய மாடலின் விபரங்களை காணலாம். ரேஞ்ச்ரோவர் எவோக் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி இந்தியாவில் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே வந்துள்ளது. இந்த எஸ்யூவி அதிகபட்ச வசதிகள் கொண்ட HSE Dynamic என்ற டாப் வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும். 

புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவியின் கன்வெர்ட்டிபிள் மாடல் 2 கதவுகள் கொண்ட மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண மாடலுக்கும் இந்த கன்வெர்ட்டிபிள் மாடலுக்கும் டிசைனில் பொதுவான டிசைனில் மாற்றங்கள் இல்லை. அதேநேரத்தில், மூடி திறக்கும் வசதியுடன் கூடிய ஃபேப்ரிக் கூரை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
உலகில் தயாரிப்பில் உள்ள கன்வெர்ட்டிபிள் கார் மாடல்களில் பெரிய அளவிலான மூடி திறக்கும் கூரை அமைப்பாக இதனை லேண்ட்ரோவர் நிறுவனம் குறிப்பிடுகிறது. இந்த காரின் ஃபேப்ரிக் கூரையானது திறப்பதற்கு 18 வினாடிகளையும், மூடுவதற்கு 21 வினாடிகளையும் எடுத்துக் கொள்கிறது. புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் கன்வெர்ட்டிபிள் கார் 4,370மிமீ நீளமும், 1,900மிமீ அகலமும், 1,609மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண எவோக் எஸ்யூவியைவிட இது 10 மிமீ கூடுதல் நீளம் கொண்டது. அதேநேரத்தில், அகலம் 220மிமீ வரையிலும், உயரம் 26மிமீ வரையிலும் குறைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த எஸ்யூவி 500மிமீ ஆழமுடைய நீர்நிலைகளில் கூட செல்வதற்கான கட்டமைப்பை பெற்றிருக்கிறது. மூடி திறக்கும் கூரைக்கான இடவசதி பூட் ரூமில் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இந்த எஸ்யூவியில் 251லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடம்பெற்றிருக்கிறது. இது சாதாரண மாடலைவிட 73 லிட்டர் குறைவு.
டாப் வேரியண்ட் மாடலாக வந்திருக்கும் இந்த புதிய எவோக் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவியில் 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 16 ஸ்பீக்கர்கள் கொண்ட 825W மெரிடியன் சர்ரவுண்ட் சவுன்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.
இந்த எஸ்யூவியில் டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் உள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், கார் கவிழாமல் பாதுகாக்கும் ரோல் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ட்ரெயிலர் கவிழாமல் செல்வதற்கான தொாழில்நுட்ப வசதி, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ஏர்பேக்குகள் என ஏராளமான பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது. 
இந்த எஸ்யூவி 0 - 100 கிமீ வேகத்தை 8.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 217 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. இந்தியாவின் முதல் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி என்பதோடு, கூரை இல்லாமல் அதிவேகத்தில் செல்லும்போது புதிய பரவச பயண அனுபவத்தை வழங்கும். 
புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி ரூ.69.53 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சாதாரண எவோக் எஸ்யூவியின் HSE Dynamic வேரியண்ட்டைவிட இந்த கன்வெர்ட்டிபிள் மாடல் ரூ.9.54 லட்சம் கூடுதல் விலை கொண்டது.