ரயில் பெட்டிகள் கொரோனாவுக்கு தனிமைப்படுத்தப்படும் அறைகளாக மாற்றம்.!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தற்போது வரை 979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்  பாதிக்கப்பட்டோருடன் நேரடித் தொடர்பில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வைரஸ் பரவல் கணித்த விகிதத்தை விட வேகமாக இருப்பதால் மருத்துவ வசதிகள் கிடைப்பதில் சிரமாக இருக்க வாய்ப்புள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், இந்தியாவில் இயக்கப்படும் 13,523 பயணிகள் ரயில்களின் இயக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரயில் பெட்டிகளை கொரோனாவால் தனிமைப்படுத்துதலுக்கான அறைகளாக மாற்ற முயற்சிகள் எடுக்குமாறு இரயில்வே அமைச்சகம் அனைத்து மண்டலங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனிமைப்படுத்தும் அறை அமைப்பது குறித்து தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை தென்னக ரயில்வே நிர்வாகம் அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில், அனைத்து மண்டலங்களும் தனிமைப்படுத்துதல் அறையை மத்திய அரசு வழிகாட்டியுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கேபினுக்கு ஒருவர் என்ற வீதம் அதற்கு ஏற்றார் போல அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. 

அதாவது, முதல் கதவுக்கு அடுத்துள்ள அனைத்து தடுப்புகளையும் நீக்குதல், பெட்டியினுள் அமைந்திருக்கக் கூடிய கழிவறைகளில் ஒன்றினை குளியலறையாக மாற்றுதல், கை கழுவுவதற்கான வசதிகளை முறையாக ஏற்படுத்துதல், பெட்டியினும் உள்ள அனைத்து மைய படுக்கைகளையும் நீக்குதல், படுக்கைகளில் ஏறுவதற்காக பயன்படுத்தப்படும் ஏணிகளை நீக்குதல், தண்ணீர் பாட்டில்களை வைப்பதற்கான தாங்கிகளை அதிகரித்து, மருத்துவ உபகரணங்களை வைக்கும் அமைப்பாக அவற்றை மாற்றுதல், 230 வோல்ட் அளவுள்ள மின்சாரம் கிடைக்க வழிவகை செய்வதோடு, லேப்டாப், மொபைல்களை சார்ஜ் செய்வதற்கான வசதிகளை முறையாக ஏற்படுத்தி தருதல் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்துதல் அறை அமைக்கப்பட உள்ளன.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்