இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்-விசாரணைக்கு தடை கோரிய தினகரனின் மேல் முறையீட்டு மனு ஒத்திவைப்பு

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட  வழக்கின் விசாரணைக்கு தடை கோரிய தினகரனின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 ஜெயலலிதா மறைவிற்கு பின்  இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் எடப்பாடி பழனிச்சாமி -ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் டிடிவி தினகரன் அணிக்கு இடையே கடும்  போட்டி நிலவியது. இதன் பின்னர்  தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகாரில் தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார் தினகரன்.

தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசாரித்து வருகிறது.டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது டெல்லி காவல்துறையினர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தது. இதனிடையே இந்த வழக்கை விசாரிக்க தடை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில்  தினகரன் சார்பில்  மனுத் தாக்கல் செய்யப்பட்டது.இதனையடுத்து வழக்கின் விசாரணை  உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.எனவே நேற்று நடைபெற்ற விசாரணையில் ,தினகரனின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.