உள்ளாட்சித் தேர்தல் நடத்த எதிர்ப்பு- உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை

  • தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
  • உள்ளாட்சித் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்த  வழக்கை உச்சநீதிமன்றம் இன்று  விசாரணை நடத்துகிறது.

திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட  9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி அளித்தது.இதனால் தமிழக மாநில தேர்தல் ஆணையம் ,முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30ம் தேதியும் நடைபெறும் என்று அறிவித்தது.மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் தற்போது  நடைபெறவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில்  திமுகவின் மாவட்ட செயலாளர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு முறைகளை முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தை நாடுவோம் என்று  தெரிவிக்கப்பட்டது.

இதற்கு ஏற்ற வகையில் உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு  முறையை சரியாக பின்பற்றவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் முறையீடு செய்யப்பட்டது.இந்த கோரிக்கையை ஏற்று இன்று விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.