மருத்துவர் உயிரிழந்த செய்தி மிகுந்த மன வருத்தத்தை அளிக்கின்றது -தெலுங்கானா ஆளுநர் தமிழிசை

மருத்துவர் உயிரிழந்த செய்தி மிகுந்த மன வருத்தத்தை அளிக்கின்றது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

 சென்னையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை கீழ்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்ய ஊழியர்கள் முற்பட்டபோது, அப்பகுதி மக்கள் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பின்னர் மருத்துவரின் உடல் வேறு இடத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், கொரோனா தொற்றால் மருத்துவர் உயிரிழந்த செய்தி மிகுந்த மன வருத்தத்தை அளிக்கின்றது. மேலும் அம்மருத்துவரின் உடல் அடக்கத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பு மிகுந்த மன வேதனை அளிக்கிறது.இந்த இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவ பணியாற்றும் அனைவரையும் மதிப்போம்.கொரோனாவால் இறப்பவர்களை நல்லடக்கம் செய்வதற்கான வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வேண்டிய கட்டுப்பாடுகளையும்,வழிகாட்டுதல்களையும் அளித்திருக்கிறது .அதனை பின்பற்றினால் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்ற செய்தியை மக்களுக்கு தெரிவிப்பது நமது கடமை என்று பதிவிட்டுள்ளார்.