தொடரும் விமான விபத்துகள்?விழுந்து நொருங்கிய விமானம் … விபத்துக்கு காரணம் என்ன?

50 பேர் நேபாளத் தலைநகர் காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட விமானம் தீப்பிடித்து எரிந்ததில்  உயிரிழந்தனர்.

வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து, 67 பயணிகள், 4 விமானப் பணிக்குழுவினர் ஆகிய 71 பேருடன், யு.எஸ்.-பங்க்ளா ஏர்லைன்ஸ் (US-Bangla Airlines) விமானம் காத்மாண்டு வந்தது. அங்கு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியதும், விமான தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சரியான திசையில் தரையிறங்காமல் ஓடுதளத்திலிருந்து விலகியது.

விமான நிலையத்தின் அருகே உள்ள கால்பந்து மைதானத்தை நோக்கி சென்றதில், தடுப்புச்சுவரில் விமானத்தின் சக்கரம் உரசியதில் நெருப்பு ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக மீட்புக்குழுவினர் உஷார்ப்படுத்தப்பட்டு பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது.

விமானத்தின் சிதைந்த பாகங்களிடையே காயங்களுடன் சிக்கியிருந்த 21 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 50 பேர் சடலங்களாக மீட்கப்பட்டதாக மீட்புக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தீவிபத்துக்கான காரணம் குறித்து யு.எஸ்.-பங்க்ளா ஏர்லைன்ஸ் நிறுவனமும், விமானநிலைய கட்டுப்பாட்டறை அதிகாரிகளும் இருவேறு தகவல்களை தெரிவிக்கின்றனர். விமான நிலைய மேலாளரான ராஜ்குமார் சேத்ரி அளித்த தகவலின் படி, கட்டுப்பாட்டறையிலிருந்து அனுப்பப்பட்ட தகவல்களை விமானி பின்பற்றவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு திசையிலிருந்து தரையிறங்குவதற்கான அனுமதி கிடைத்தபின்னர் வடகிழக்கு திசையை நோக்கியவாறு விமானம் இருமுறை வட்டமிட்டுள்ளது.

இது குறித்து எச்சரிக்கப்பட்டதாகவும், ஆனால் விமானி தரப்பிலிருந்து ஆபத்துக்குரிய எந்த சமிக்ஞையும் தங்களுக்கு கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் தவறான வழிநடத்துதலே விபத்துக்கு காரணம் என யு.எஸ்.-பங்க்ளா ஏர்லைன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. நேபாள விமான நிறுவனங்கள் மோசமான சேவை வழங்குபவையாக பட்டியலிடப்பட்டு ஐரோப்பிய யூனியனில் தடை செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி திரிபுவன் விமான நிலையமும் அதிக விபத்துக்களை சந்தித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment