ஊரடங்கினால் மட்டுமே கொரோனாவை ஒழித்திட முடியாது.! – முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வருக்கு அறிக்கை மூலம் வலியுறுத்தி உள்ளார் .இதுகுறித்த அவர் ஒர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், தற்போது சென்னை தவிர பிற நகரம் மற்றும் கிராமப்புறங்களிலும் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சரியான சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் மருத்துவர்களுடன் கலந்தாலோசித்து பயனுள்ள ஆலோசனைகளை பெற்று அதனை செயல்படுத்த கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவ கட்டமைப்பானது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். எனவே, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதலை பெற்று தமிழகத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப மருத்துவ குழுவுடன் ஆராய்ந்து தமிழகத்திற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் நோய் தொற்று பரவி உள்ளதால் தற்போது சமூக பரவல் இல்லை என அரசு கூறுவது மக்களிடம் விபரீதத்தை உணர்த்தாமல் இருக்கும் ஆபத்தான போக்கு ஆகும். எனவே, சமூக பரவல் குறித்து முறையான வல்லுனர் குழுவை நியமித்து அறிக்கையை பெற்று உடனடியாக அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தொற்று பரவியுள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்று ஏற்பட்டு உள்ளவர்கள் அவர்களின் தொடர்பு உள்ளிட்டவற்றை விரைவாக கண்டறிந்து மருத்துவ சிகிச்சையை தொடங்க வேண்டும்.

ஊரடங்கு மட்டுமே கொண்டு கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலுமாக ஒழிக்க முடியாது என்பதை அரசு உணர வேண்டும். இதற்கான சரியான மருத்துவ கொள்கை ஒன்றை வகுத்து அதனை செயல்படுத்தி அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நோய் பரவலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னைதவிர பிற மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளின் இருக்கைகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் ஓய்வறைகள் ஆக்சிஜன் விகிதம் ஆகியவை சரியாக இருக்கிறதா என ஒளிவு மறைவின்றி அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

கொரோனா மருத்துவ கழிவுகளை சரியான வகையில் அகற்ற வேண்டும்.

முக கவசம் அணிந்து கொள்வது, பொது இடங்களில் எச்சில் துப்புதலை தவிர்த்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற புதிய நடைமுறைக்கு மக்கள் தற்போது தயாராகி விட்டனர். இது வரவேற்கத்தக்க விஷயம். இதனைப் பயன்படுத்தி மற்ற தொற்று நோய்களான காசநோய் போன்றவற்றை தமிழகத்தில் இருந்து முழுமையாக நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது வைரஸ் நோய் தவிர மற்ற நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை நோயாளிகளால் பெறமுடியவில்லை. சில ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும், சரியான சிகிச்சை பெற முடியாமலும் தவிர்த்து வருகின்றனர். ஆகவே, நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடையின்றி சரியான சிகிச்சை அளிக்க ஒரு செயல்திட்டம் உருவாக்கி அதனை அரசு செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளானது மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது. அதனை சரியாக பயன்படுத்தி இந்தப் பேரிடர் காலத்தில் மக்களுக்கு சரியான பாதுகாப்பை அரசு வழங்கும் என நம்புகிறேன்.

மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற்று அதனை உடனடியாக நிறைவேற்றி கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை உடனடியாக தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.