அமைச்சரவையில் இருந்து திடீர் நீக்கம் !மணிகண்டனின் அரசியல் பயணம் குறித்து ஒரு பார்வை

தமிழக அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட மணிகண்டனின் அரசியல் பயணம் குறித்து நாம் பார்ப்போம்.

மணிகண்டன் ராமநாதபுரத்தில் 1976 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி  பிறந்தார்.இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர் ஆவார்.சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் எம்எஸ் பட்டமும் பெற்றுள்ளார்.இவர் மதுரை மருத்துவ கல்லூரியில் அறுவைசிகிச்சை பிரிவு உதவி பேராசிரியராக பணிபுரிந்தவர்.

இவரது தந்தை முருகேசன் அதிமுகவில் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்தவர்.இதனால் 1997 ஆம் ஆண்டு தனது 21-வது வயதில்  அதிமுகவில் இணைந்தார் மணிகண்டன்.பின்னர் அதிமுகவின் மருத்துவ அணியின் துணை செயலாளராக பதவி ஏற்றார் .அதோடு மக்கள் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.குறிப்பாக இலவசமாக மருத்துவ உதவிகளை செய்து வந்ததால் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றார்.

சரியாக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 15 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய மணிகண்டன் ராமநாதபுரம் தொகுதியில் 33,222 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இதனையடுத்து இவர் வெற்றி பெற்ற நிலையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இவருக்கு தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவியை வழங்கினார்.சரியாக 39-வது வயதில் அமைச்சராக பொறுப்பேற்றார்.சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாகவும் அமைச்சர் பதவி வகித்த நிலையில் தற்போது அவர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் மணிகண்டன்.