கொசு கடிப்பதற்கு முன் உள்ளாட்சித்துறை பணி, கடித்த பிறகு சுகாதாரத்துறை பணி !நான் கூறியதில் தவறில்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்

கொசு கடிப்பதற்கு முன் அது உள்ளாட்சித்துறை பணி, கொசு கடித்த பிறகு அது சுகாதாரத்துறை பணி என்று நான் கூறிய கருத்தில் தவறில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மர்ம காய்ச்சல் என எதுவும் இல்லை. காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து எந்த காய்ச்சல் என கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 210 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை டெங்குவால் யாரும் உயிரிழக்கவில்லை.டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவு.
அரசு மருத்துவமனைகளில் எந்த நேரத்திலும், யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் . அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கொசு கடிப்பதற்கு முன் அது உள்ளாட்சித்துறை பணி, கொசு கடித்த பிறகு அது சுகாதாரத்துறை பணி. எனவே உள்ளாட்சித்துறையும், சுகாதாரத்துறையும் சேர்ந்து டெங்கு தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது என கூறினேன்.நான் கூறிய கருத்தில் தவறில்லையே? என்றும் மனசாட்சி இல்லாமல் ஸ்டாலின் பேசுவது கண்டனத்திற்குரியது என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.