சர்ச்சையாக மாறிய லாரன்ஸ் பேச்சு ! கமலை நேரில் சந்தித்து விளக்கம்

  • நிகழ்ச்சியில் கமல்ஹாசன் குறித்து ராகவா லாரன்ஸ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 
  • நடிகர் கமலை சந்தித்து விளக்கமளித்தேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு  முன்னர் தர்பார் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில்  நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் பேசினார்.அவர் பேசுகையில், தலைவர் (ரஜினிகாந்த் ) படம் வெளியாகும்போது, போஸ்டர் ஒட்டும்போது சண்டையிட்டுள்ளேன். கமல் சார் போஸ்டர் ஒட்டினால் அதில் சாணி அடித்தேன் .ஆனால்  என்னுடைய மனநிலை அப்போது அப்படி இருந்தது. இப்போது தான் தெரிந்தது இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று .இவ்வாறு லாரன்ஸ் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்துள்ளார் லாரன்ஸ்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தகவலில்,  அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது. எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்துப் பரப்பப்படுகின்றது என்று ஏற்கனவே நான் விளக்கமளித்துள்ளேன்.

இந்நிலையில் இன்று  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தேன். எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கமல் ஹாசன், என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார்.வருக்கு என் நன்றியையும் என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.