காணொளி காட்சி மூலம் மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.  இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர். அப்போது  கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சவால்கள், மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ வசதிகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஊரடங்கை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். பின்னர் ஊரடங்குக்காலம் முடிந்ததும் மக்கள், மீண்டும் இயல்பு வாழ்க்கையை தொடங்குவதில் தடுமாற்றம் இல்லாத நிலையை உருக்க குறைந்தபட்ச கொள்கையை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் வரும் நாட்களில் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள், தனிமைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தேவையான மருந்துகள் மருத்துவ பொருட்கள் விநியோகத்தை பராமரிப்பது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார். இதையடுத்து மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆயுஷ் மருத்துவர்கள், பாரா மெடிக்கல் ஊழியர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வருக்கும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்