ஜானி பேர்ஸ்டோ திட்டவட்டம் …சதங்களெல்லாம் இனி வரப்போவதற்கான சாம்பிள்கள்தான்….

புதிய திருப்பமாக தொடக்க வீரராகக் இங்கிலாந்து ஒருநாள் அணியின்  களமிறக்கப்பட்ட ஜானி பேர்ஸ்டோ தொடக்க நிலையில் 4 ஒருநாள் சதங்களை எடுத்து வெளுத்துக் கட்டி வருகிறார்.

நியூஸிலாந்துக்கு எதிராக 4வது போட்டியில் 138 ரன்கள் சாத்தி எடுத்த பேர்ஸ்டோ இன்று வேறு ஒரு ரக இன்னிங்ஸை ஆடி 58 பந்துகளில் அதிரடி சதம் கண்டு நியூஸி. பந்து வீச்சை புரட்டி எடுத்தார்.

19 செப்டம்பர் 2017-ல் தொடக்க வீரராக மே.இ.தீவுகளுக்கு எதிராக 100 நாட் அவுட் என்று வெற்றி நாயகனாக தன் சதத்தைத் தொடங்கிய பேர்ஸ்டோ அதே தொடரில் சவுதாம்ப்டனில் 141 நாட் அவுட் என்று அதிரடி காட்டினார். ஆஸி.க்கு எதிராக பிரிஸ்பனில் ஒரு அதிரடி 60 காட்டினார், தற்போது நியூஸிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் டுனெடினில் 138 ரன்கள் எடுத்தார், ஆனால் டெய்லரின் 181 நாட் அவுட் அபார இன்னிங்ஸினால் இவரது இன்னிங்ஸ் பின்னுக்குச் சென்றது. இதனையடுத்து இன்று 104 ரன்களை 60 பந்துகளில் அடித்தார். இங்கிலாந்து தொடரை வென்றது.

கடந்த 15 ஒருநாள் இன்னிங்சில் 4வது சதம் கண்டார் ஜானி பேர்ஸ்டோ.

இதனையடுத்து இன்றைய ஆட்ட நாயகனான ஜானி பேர்ஸ்டோ இங்கிலாந்து ஊடகத்தில் தெரிவிக்கும் போது,

“நடுவில் இறங்கி ஆடுவதை விட தொடக்க வீரராக இறங்குவது என்பது வேறு ஒரு தன்மையினதாகும். இப்போது என்னுடைய பணி களத்தில் இறங்கி பெரிய பெரிய சதங்களை எடுப்பதாகும். அணிக்காக மேட்ச் வின்னிங் ஆட்டத்தை ஆட வேண்டும்.

இதைத்தான் என் இலக்காக, அடையாளமாகக் கொண்டுள்ளேன். இந்தச் சதங்களெல்லாம் இனி வரப்போவதற்கான சாம்பிள்கள்தான், நீண்ட நாட்களுக்கு இன்னும் அதிரடி தொடரும்.

தொடக்கத்தில் கொஞ்சம் அதிக நேரம் கிடைக்கிறது. 10 பந்துகள் ஆடி 2 ரன்கள்தான் எடுத்திருக்கிறோம் என்பது வெறுப்பை ஊட்டியது. ஆனால் இப்போது அப்படி ஏற்பட்டாலும் பின்னால் அதற்கு ஈடுகட்டிவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது.” என்றார்.

உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் இந்த ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய் ஜோடி உலக பவுலர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்வார்கள் என்பது உறுதி.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment