ராஜகோபால் – சாந்தகுமார் – ஜீவஜோதி! ஹோட்டல் அதிபர் முதல் கடத்தல் கொலையாளி வரை…! பின்னனி என்ன?

சென்னை சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் தனது ஹோட்டல் நிறுவனத்தை பல கிளைகளுடன் வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளார். இந்த ஹோட்டல் உயர்தர சைவ உணவகமாக உலகம் முழுக்க தமிழர்கள் மத்தியில் பிரபலமானது. வெளிநாடுகளிலும் பல கிளைகளை இந்த புகழ் உருவாகக்கியது.  தரத்தில் சரவணபவன் மீது மக்கள் வைத்த அதீத நம்பிக்கை ஹோட்டல் துறையில் முடிசூடா மன்னனாக சரவணபவனை திகழவைத்தது. அவருக்கு இரு மனைவிகள் உள்ளனர். ஜோதிடம் மீது அதீத நம்பிக்கை உண்டு. ஜோதிடர் சொல்பேச்சு கேட்டு தான் முக்கிய காரியங்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த நம்பிக்கையும் அவரது ஆசையும்தான் அவரை சாகும் வரை நீதிமன்றம் வழக்கு என அலைக்கழித்து உள்ளது. இவர், தனது நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்த ராமசாமி என்பவரின் மகளான ஜீவஜோதி மீது ஆசை வர, அவரின் ஜாதகத்தினை ஆராய்ந்த ஜோதிடர்கள், ஜீவஜோதியை மூன்றாவதாக திருமணம் செய்தால்,  உலகபணக்காரர்களில் ஒருவராகலாம் என கூற, பின்னர் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் ராஜகோபால்.

திடுக்கிட்டு போன ஜீவஜோதி, தனது காதலர் பிரின்ஸ் சாந்தகுமாரை திருமணம் செய்துகொண்டார். இதனை எதிர்பார்க்காத ராஜகோபால் திருமணத்திற்கு பின்பும் அவருக்கு குடைச்சல் கொடுத்துள்ளார். இதனால் ராஜகோபால் மீது, ‘ எங்களை மிரட்டுகிறார்’ என ஜீவஜோதியும், அவரதும் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரும் போலீசில் புகார் அளித்தனர்.

புகார் அளித்த 2001 அக்டோபர்  மாதமே சாந்தகுமார் கடத்தப்பட்டார். தன் கணவர் கடத்தப்பட்டதை தொடர்ந்து ஜீவஜோதி அளித்த புகாரின் பேரில்,  போலீசார் சாந்தகுமாரை 4 நாட்களுக்கு மேலாக தேடி, பின்னர் கொடைக்கானல் மலையில் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் கடத்தல் வழக்கு, கடத்தல் கொலை வழக்காக மாறியது. இது சம்பந்தமாக ராஜகோபால், மற்றும் அவரது உதவியாளர்கள் டேனியல், கார்மேகம் உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னர் ராஜகோபால் தலைமறைவாக, பின்னர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் இருந்தார். 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மதம் இந்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 55 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் 10 ஆண்டுகள் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

இதில் சிறைக்கு செல்ல முடியாது உடல்நிலை சரியில்லை. சரணடைய அவகாசம் வேண்டும் என கூறி, உச்சநீதிமன்றத்தில்,  ராஜகோபால் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அன்றைய தினமே ஜூலை 9ஆம் தேதியே சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவரை சிறையில் அடைத்து தண்டனை கைதிகள் சிகிச்சை பெற்று கொள்ளும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ளுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் அவரது மகன் சரவணன், தனது தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு கோரப்பட்ட மனு ஏற்கப்பட்டு அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி வழங்கப்பட்டது.

அதன் பேரில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார். கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைப்பலனின்றி  ராஜகோபால் காலமானார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.