எரித்து கொல்லப்பட்ட ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5,00,000 நிதி உதவி அறிவிப்பு.!

உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

விழுப்புரம் அருகே சிறுமதுரை என்ற ஊரில் ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீயை அதிமுக உறுப்பினர்கள்   கலியபெருமாள் மற்றும்  முருகன் ஆகியோர்  தீவைத்து கொளுத்தினர். பலத்த காயங்களுடன் ஜெயஸ்ரீ  முண்டியப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அதிமுக உறுப்பினர்கள்  கலியபெருமாள் மற்றும்  முருகன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமியின் இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் உரிமைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு ஆணை பிறப்பித்தது. 

இந்நிலையில்,  சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவரை கட்சியிலிருந்து அதிமுக நீக்கியது. இதைத்தொடர்ந்து,  தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  குற்றவாளிகள் மீது திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூர செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk