வருவாய் இழப்பை சரிசெய்ய, மக்கள் மீது பழிபோடுவது நியாயமல்ல – மு.க ஸ்டாலின்

எந்த ஓர் அரசும் இப்படிப்பட்ட அபாயகரமான நடவடிக்கையை மேற்கொள்ளாது என்று  மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மே 3-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு மே -17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடாகா மற்றும் ஆந்திராவில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் ஒரு சில மாநிலங்களிலும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இடையில் தான் தமிழக அரசும் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.அதாவது, தமிழகத்தில் வரும் 7 -ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க உள்ளதாக அறிவித்தது.  தடைசெய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திறக்க அனுமதி அளித்துள்ளது.ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை என்றும் நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள டாஸ்மாக்  கடைகள் திறக்கப்பட மாட்டாது என்று அறிவித்தது.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில்,இன்று அரசிடமிருந்து பேரிடர் பாதுகாப்புக்கான முக்கிய அறிவிப்பு வரும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வந்ததோ,டாஸ்மாக்  மதுபானக் கடைகள் திறப்புக் குறித்த அறிவிப்பு.ஊரடங்கினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பை சரிசெய்ய, மக்கள் மீது பழிபோடுவது நியாயமல்ல.ஊரடங்கு காலத்தில் மீண்டும் மீண்டும் மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கான சூழலை உருவாக்குவது, கொரோனா நோய்த் தொற்றை அதிகரிக்கவே செய்யும். ஆளுமையும் அக்கறையும் உள்ள எந்த ஓர் அரசும் இப்படிப்பட்ட அபாயகரமான நடவடிக்கையை மேற்கொள்ளாது என்று தெரிவித்துள்ளார்.