வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை? ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பெங்களூரு அணியுடன் இன்று மோதல்…

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று மாலை 5.30 மணிக்கு பெங்களூரு ஸ்ரீகண்டிவீரா மைதானத்தில் நடைபெறும் ஆடடத்தில் சென்னையின் எப்சி – பெங்களூரு எப்சி அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு எப்சி அணி இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் இன்றைய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சி அணியை சந்திக்கிறது. பெங்களூரு அணி இதுவரை மோதி உள்ள 5 ஆட்டங்களிலும் 13 கோல்கள் அடித்துள்ளது. அதேவேளையில் 6 கோல்கள் மட்டுமே வாங்கியுள்ளது.

பெங்களூரு அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் (1-0), புனே எப்சி (3-1) அணிகளை வீழ்த்தி உற்சாகத்தில் உள்ளது. இந்த இரு ஆட்டங்களையும் வெளிமைதானங்களில் விளையாடிய நிலையில் இன்றைய ஆட்டத்தை சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது பெங்களூரு அணி. இன்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் தடுப்பாட்டத்தை பெங்களூரு கடும் சோதனைக்கு உட்படுத்தும் என கருதப்படுகிறது.

அதிலும் முன்னணி வீரரான மிகு கடும் சவாலாக இருக்கக் கூடும். இந்த சீசனில் அவர், 6 கோல்கள் அடித்துள்ளார். இதில் இரு கோல்கள் மும்பை அணிக்கு எதிராக அடிக்கப்பட்டதாகும். இவருடன் எமிலியானோ அல்பாரோ மற்றும் கேப்டன் சுனில் ஷேத்ரி ஆகியோரும் அசத்த காத்திருக்கின்றனர். இதில் சுனில் ஷேத்ரி இந்த சீசனில் இரு கோல்கள் அடித்துள்ளார்.

சிறந்த பார்மில் உள்ள நடுக்கள வீரரான உடான்டா சிங், கோல்கள் அடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதில் அசத்தி வருகிறார். மீண்டும் அவர் அணிக்கு பலம் சேர்க்க தயாராக உள்ளார். இரு ஆட்டங்களில் தடை விதிக்கப்பட்டிருந்த கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து இன்று களமிறங்கக்கூடும்.

சென்னையின் எப்சி அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 9 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. அந்த அணி 9 கோல்கள் அடித்துள்ளது. 6 கோல்கள் வாங்கி உள்ளது.

இந்த சீசனை தோல்வியுடன் தொடங்கிய சென்னை அணி அதன் பின்னர் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று அசத்தியது. ஆனால் கடைசியாக மும்பை சிட்டி எப்சி அணியுடன் மோதிய ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது.

இன்றைய ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களான ஜே ஜே லால்பெகுலா, ரபேல் அகஸ்தோ, கேப்டன் ஹென்ரிக் சேரேனோ, இனிகோ கால்டிரான், மெயில்சன் ஆல்வ்ஸ் ஆகியோர் கூட்டாக சிறந்த திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் வெற்றிக்கு வழிவகுக்கலாம். இரவு 8 மணிக்கு மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, மும்பை சிட்டி எப்சி அணியை எதிர்கொள்கிறது.

Leave a Comment