இது இந்தியாவா? “இந்தி”-யாவா? – கனிமொழி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி

இது இந்தியாவா? “இந்தி”-யாவா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லிக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த திமுக எம்.பி கனிமொழியை பார்த்து, அங்கு பணியிலிருந்த சிஐஎஸ்எப் பெண் காவலர் ஒருவர் “நீங்கள் இந்தியனா?” என கேட்டுள்ளார்.இது தொடர்பாக நேற்று திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,’இன்று விமான நிலையத்தில் ஒரு விமானநிலைய அதிகாரி என்னிடம் இந்தியனா என ஹிந்தி மொழியில் கேட்டார். எனக்கு இந்தி தெரியாததால் என்னுடன் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டுகொண்டேன். இந்தியனாக இருப்பதே, இந்தியை அறிந்து வைத்து கொள்வதற்கு சமமானது என்பதை நான் இன்று அறிந்துகொண்டேன்’ என்று பதிவிட்டார்.இந்த விவகாரம் தற்போது  பேசும் பொருளாக மாறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அந்த சிஐஎஸ்எப் அதிகாரியிடம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐஎஸ்எப் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,இந்தி தெரியாது என்று சொன்னதால், ‘நீங்கள் இந்தியரா?’ என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழியை பார்த்துக் கேட்டுள்ளார். இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.