சமையலறையை சுத்தமாக வைக்க உதவும் 5 வழிகள்..!

5 Ways To Help Clean The Kitchen ..!

ஒரு இல்லத்தில் ஆரோக்கியம் சிறக்க வேண்டும் என்றால், சமையலறை சுத்தம் என்பது தான் அடிப்படை மற்றும் அத்யாவசியம். பெரும்பாலான இல்லங்களில் கணவன் - மனைவி இருவரும் பணிக்கு சென்றுவிடுவதால், குழந்தகளால், சரியான திட்டமிடல் இல்லமை போன்ற பல காரணங்களால் சமையலறை குப்பை மேடு போல காணப்படுவதுண்டு. இந்த நிலை தொடர்ந்தால் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி விட வாய்ப்பு உண்டு. ஆகையால், உங்கள் வீட்டு சமையலறையை என்றென்றும் சுத்தமாக வைக்க உதவும் சில வழிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

கண்ணில் படும்படி…

பல இல்லங்களில் பெண்கள், சமையலறைதனில் பொருட்களை சீராக அடுக்கி வைக்கிறேன் என்ற பெயரில் முக்கிய பொருட்களை கண்ணுக்கு எட்டாத வகையில் ஒளித்து வைத்து விடுவர்; பின்பு அதை தேடுகிறேன் என்ற பெயரில் ஒட்டு மொத்த சமையலறையையும் குலைத்து அசுத்தமாக்கிவிடுவர். இந்த பிரச்சனையை தீர்க்க பெண்கள் சமையலறையில் அன்றாடம் தேவைப்படும் முக்கிய பொருட்களை கண்ணில் படும்படி வைக்க வேண்டியது மிகவும் அவசியம்.

குழந்தைகளை பழக்குதல்..

குழந்தைகளை சிறு வயதில் இருந்தே இல்லத்தின் சுத்தம் குறித்த விஷயங்களை கடைபிடிக்க செய்தல் அவசியம்; அதற்கு முன், சுத்தம் பற்றிய சரியான போதனையை அவர்களுக்கு வழங்க வேண்டியதும் முக்கியம். 5 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை அவர்கள் உண்ட தட்டுக்களை அவர்களே கழுவி வைத்தல், உணவு உண்ட மேசையை தாயாருக்கு துடைக்க உதவுதல் என்று சிறு சிறு பணிகள் மூலம் அவர்களை சுத்தப்படுத்தலில் ஈடுபடுத்தினால், வீட்டின் சுத்தம் குறைய கட்டாயம் வாய்ப்பே இல்லை.

சுத்தம் செய்யும் பொருட்கள்…

சுத்தம் செய்யும் பொருட்களை தேடுகிறேன் என்ற பெயரில் பல பெண்கள், வீட்டில் நிலவிய சுத்தத்தையும் இல்லாமல் செய்து விடுவர்; ஆகையால், சுத்தம் செய்யும் பொருட்களை உங்கள் கண்ணில் படும்படி, அதே நேரத்தில் குழந்தைகள் அதை நெருங்காமல் இருக்கும் படி சமையலறையில் அடுக்கி வைத்துக் கொள்ளல் அவசியம்.

திட்டமிடல் வேண்டும்!

வீட்டின் சமையலறையை கட்டும் பொழுதே எங்கு எது வர வேண்டும் என்று திட்டமிட்டு கட்டுதல் வேண்டும்; இது முடியாவிடின் இருக்கும் சமையலறையில் எங்கு எதை வைத்தால், உணவு சமைக்க, சுத்தம் செய்ய என எல்லா செயல்களுக்கும் உதவியாக இருக்கும் என்ற திட்டமிடலுடன் வீட்டின் சமையலறையை அமைக்க வேண்டும்; அவ்வகையில் பொருட்களை அடுக்கி வைத்தல் வேண்டும்.

தினசரி சுத்தம்..!

இல்லம் ஆரோக்கியத்துடன் இன்பமயமாக இருக்க தினசரி சுத்தம் அவசியம். எவ்வளவு தான் வேலைகள் இருந்தாலும், தினம் ஒரு முறையாவது ஒட்டுமொத்த வீடு அல்லது வீட்டின் முக்கிய இடங்களான வசிக்கும் பகுதி,  சமையலறை, குளியலறை போன்றவற்றை சுத்தம் செய்தல் நல்லது.