குஜராத் முதல்வராக விஜய் ருபானி பதவியேற்பு: பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் 18 மாநில முதல்வர்கள் பங்கேற்பு!

குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்ததை தொடர்ந்து, மாநிலத்தின் முதல்வராக விஜய் ருபானி (61) , துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் 18 அமைச்சர்கள் நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.

தலைநகர் காந்திநகரில் உள்ள புதிய தலைமைச் செயலக வளாகத்தில் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் குஜராத்தின் 16-வது முதல்வராக விஜய் ருபானி பதவியேற்றார். இவருடன் துணை முதல்வர் நிதின் படேல் உட்பட 19 அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்களுக்கு மாநில ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாஜக, அதன் கூட்டணி ஆளும் 18 மாநிலங்களின் முதல்வர்கள் இவ்விழா வில் பங்கேற்றனர்.

பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக விஜய் ருபானி மற்றும் நிதின் படேலுக்கு பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதற்கு முன்னதாக, விஜய் ருபானி தனது மனைவியுடன் பஞ்சதேவ் மகாதேவ் கோயிலில் வழிபாடு செய்தார். பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி புதிய கட்சி தொடங்கிய சங்கர் சிங் வகேலா உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற் றனர்.

அமைச்சர்களாக பதவியேற்றவர்களின் விஜய் ருபானி உட்பட 10 பேர் கேபினட் அமைச்சர்கள் ஆவர். மற்ற 10 பேர் இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்ற 11 பேர் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 9 பேர் புதிய முகங்கள் ஆவர்.

குஜராத்தில் பாஜக இம்முறை சவுராஷ்டிரா பகுதியில் அதிக தொகுதிகளை இழந்தது. இப்பகுதியைச் சேர்ந்த 7 பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதுதவிர, வடக்கு குஜராத்தைச் சேர்ந்த 6 பேர், தெற்கு குஜராத்தைச் சேர்ந்த 5 பேர், மத்திய குஜராத்தைச் சேர்ந்த 2 பேர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2019 மக்களவை தேர்தலை முன்னிட்டு அமைச்சர்களை மிகவும் கவனமுடன் பாஜக தேர்வு செய்துள்ளதாக கூறப்படு கிறது.

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு கடந்த 9 மற்றும் 14-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 99 இடங்களில் வென்று தொடர்ந்து 6-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 22-ம் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக விஜய் ருபானியும் துணை முதல்வராக நிதின் படேலும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்..

source: dinasuvadu.com

Leave a Comment