அரசு ஏற்றது.! தமிழ்நாட்டில் முதன் முதலில் திருநங்கை – இளைஞர் திருமணம் பதிவானது.!

  • கோவையில் திருநங்கை மற்றும் இளைஞர் இருவரும் திருமணம் செய்துகொண்டு,

By Fahad | Published: Apr 06 2020 08:07 PM

  • கோவையில் திருநங்கை மற்றும் இளைஞர் இருவரும் திருமணம் செய்துகொண்டு, வடவள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் முதல் முறையாக இதுபோன்று நடந்துள்ளது என குறிப்பிடப்படுகிறது.
கோயம்புத்தூர் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய மணிகண்டன் என்பவர். இவர் சுரேகா என்ற திருநங்கையை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவிலில் இருவரது திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இருவரும் நரசிம்ம நாய்க்கன் பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். இதனிடையே கடந்த ஜனவரி 21-ம் தேதி இந்து திருமண சட்டத்தின்படி திருமணத்தை பதிவு செய்யக்கோரி, வடவள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். பின்னர் மணமகள் தொடர்பாக சட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர் குறித்தான இடம் பெறாததால் திருமணத்தை செய்ய சார் பதிவாளர் மறுத்துள்ளார். மேலும், மணிகண்டனின் பிறப்பு தேதி சான்றிதழ்களில் மாறி இருப்பதாகவும், இதுகுறித்து மேல் முறையீடு செய்யலாம் எனவும் சார்பதிவாளர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகததில் உள்ள மாவட்ட பதிவாளரிடம் மணிகண்டன் மற்றும் சுரேகா தம்பதியினர் மேல் முறையீடு மனு அளித்தனர். இதுகுறித்து மாநில பதிவுத்துறை தலைவர் தமிழநாடு அரசு தலைமை வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனை பெற்றுள்ளார். அப்பொழுது, இந்து திருமண சட்டத்தில் மூன்றாம் பாலினத்தனவரை மணமகன் அல்லது மணமகள் என்ற வகைப்பாட்டின் கீழ் சேர்த்து கொள்ள அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி திருமண பதிவு செய்யவும், மணிகண்டனின் பிறப்பு சான்றிதழ் தேதிப்படி பதிவு செய்யவும் வடவள்ளி சார்பதிவாளருக்கு கோவை மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இன்று வடவள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் மணிகண்டன், சுரேகா தம்பதியினர் திருமணத்தை பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் திருநங்கை - இளைஞர் தம்பதியினர் திருமணத்தை பதிவு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.