கீரை தண்டில் சானிடரி நாப்கின்களை தயாரித்து அசத்திய கல்லூரி மாணவர்கள்.!

Exciting college students making sanitary napkins in lettuce

  • புளித்த கீரையின் தண்டில் இருந்து நாரை எடுத்து நாப்கின்களை செய்து அசத்தி வருகின்றனர் கோயம்புத்தூர் பேஷன் டெக்னாலஜி மாணவர்கள் நிவேதா, கௌதம்.
  • பெண்களுக்கும், சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத இந்த நாப்கின் கண்டுபிடிப்புகளுக்காக மத்திய அரசின் பல்வேறு விருதுகளை நிவேதா, கெளதம் பெற்றுள்ளனர்.
பிளாஸ்டிக்கால் செய்யப்படும் நாப்கின்களால் உடலுக்கு கேடு என்பதால் இயற்கையை தேடி அலைந்து கொண்டிருக்கும் நிலையில் புளித்த கீரையின் தண்டில் நாப்கின்களை செய்து அசத்தி வருகின்றனர் கோயம்புத்தூர் பேஷன் டெக்னாலஜி மாணவர்கள் நிவேதா, கௌதம். பெண்கள் வாழ்நாள் முழுக்க சுமார் 15,000 சானிடரி நாப்கின்களை பயன்படுத்துகிறார். இதில் பொதுவாக பெண்கள் மாதவிடா காலங்களில் பயன்படுத்தும் நாப்கின்களில் 80% பிளாஸ்டிக்காக இருக்கும். இதனால் ஒரு நாப்கின் முழுவதுமாக மட்க, 700 - 900 ஆண்டுகள் ஆகிறது. இப்படி பிளாஸ்டிக்கும் ரசாயனங்களும் கலந்து உருவான நாப்கின்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் புற்றுநோய் முதல் பல தொற்று நோய்கள் ஏற்பட காரணமாக இருக்கின்றது. அந்த மாணவர்கள் கூறுகையில், நாங்கள் ஒரு ஆய்விற்காக புளித்த கீரையை விவசாயம் செய்பவர்களை சந்தித்தோம். இந்த கீரையின் இலைகள் உணவிற்கு பயன்பட்டாலும், அதன் தண்டுகள் வீணாகிப் போவதாக விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர். பேஷன் டெக்னாலஜி மாணவர்கள் என்பதால் புளிச்ச கீரை தண்டில் இருந்து நாரினை எடுத்து அதை துணியாக்கி முதலில் ஆடைகள்தான் வடிவமைத்தோம். பிறகு அந்த துணிகள் நல்ல உறிஞ்சும் சக்தியும், நுண்ணுயிரைக் கொல்லக்கூடிய திறன் இருப்பது தெரியவந்தது. அப்போதுதான், இதை ஏன் சானிட்டரி நாப்கின்களாக பயன்படுத்தக்கூடாது என்று தோன்றியது. கல்லூரி படிப்பில் ப்ராஜெக்ட்க்காக சானிடரி நாப்கின்களை தயாரித்த இவர்கள் அதனை குடும்பத்தில் இருந்தவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் பயன்படுத்தக் கொடுத்துள்ளனர். அவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கவே, படிப்பு முடித்த கையோடு ஸ்டார்ட் அப் தொழிலாக இந்த நாப்கின் தயாரிப்பை இருவரும் கையில் எடுத்துள்ளனர். தற்போது இதற்கு இந்தியா மட்டுமல்லாது வெளிநாட்டிலும் இவர்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர். இந்த நாப்கின் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கதாகவும், உடலுக்கும் எந்த தீங்கும் வராது என உத்திரவாதம் கொடுக்கிறார்கள் அந்த மாணவர்கள். இந்த இயற்கை நாப்கின்கள் 4 மாதத்தில் முழுமையாக மட்கக்கூடியது. மேலும் பெண்களுக்கும், சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத இந்த நாப்கின் கண்டுபிடிப்புகளுக்காக மத்திய அரசின் பல்வேறு விருதுகளை நிவேதா, கெளதம் பெற்றுள்ளனர்.