எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு திமுக அஞ்சாது – முக ஸ்டாலின் கண்டனம்.!

திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆர்.எஸ்.பாரதி கைது தொடர்பாக கண்டனம் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் என்பவர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை இன்று காலை சென்னையில் உள்ள அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஆர்.எஸ்.பாரதியை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தபட்டு இருதரப்பு வாதங்களையும் கேட்டு, தற்போது ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆர்.எஸ்.பாரதி கைது தொடர்பாக கண்டனம் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,  கொரோனா நோய்த் தடுப்பில் தோல்வியைத் திசை திருப்ப தன் மீது ஊழல் புகார் அளித்த ஆர்.எஸ்.பாரதியின் மீதான பழைய புகாரைத் தட்டி எடுத்து கைது செய்துள்ளார். எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.கவும் அஞ்சாது. அது தமிழக மக்களையும் திசை திருப்பாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொரோனா கால ஊழல்களையும், கொரோனாவை தடுக்க முடியாமல் முற்றிலும் தோல்வியடைந்து, அதோ கதியாக நிற்பதை திசை திருப்பவும், மக்கள் மன்றத்திலிருந்து மறைத்திடவும் முதல்வர் பழனிசாமியால் ஒரு போதும் அதற்கான தார்மிக பொறுப்பிலிருந்து எக்காலத்திலும் தப்பித்து விடவும் முடியாது என்று எச்சரிக்கிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்