கொரோனாவை முதலில் கண்டறிந்து எச்சரித்த மருத்துவர் மரணம்.! அதிர்ச்சியில் சக மருத்துவர்கள்.!

  • கொரோனா வைரஸ் குறித்து தொடக்கத்திலேயே எச்சரித்த சீன மருத்துவர் இந்த வைரஸ் தொற்றால் இறந்துவிட்டதாக சீன ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
  • சீனாவின் சுகாதாரத் துறைக்கு லீ போன்ற லட்சக்கணக்கான மருத்துவர்கள் தேவை என குறிப்பிடும் அவர்கள் சீன சுகாதாரத் துறை குறித்த வருத்தங்களையும் பகிர்ந்துள்ளனர்.

சீனாவை சேர்ந்த மருத்துவர் லீ வெண்லியாங் என்ற அந்த கண் மருத்துவர் வுஹான் உள்ள மத்திய மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வுஹான் நகரத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில், ஜனவரி மாத தொடக்கத்தில் தீவிரமாக இறங்கினர் சீன அதிகாரிகள். இதுகுறித்து கடந்த டிசம்பர் மருத்துவர் லீ வெண்லியாங் சக மருத்துவர்களிடம் எச்சரித்து இருக்கிறார். ஆனால், இப்படியான தகவல்களை பகிர்வதை நிறுத்தும்படி சீன போலீஸார் கூறியுள்ளனர். இது குறித்த தகவல்களை அவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப்பதிவில் அனைவருக்கும் வணக்கம், நான் கண் மருத்துவர் லீ வெண்லியாங் வுஹான் சென்ட்ரல் மருத்துவமனையில் பணியாற்றுகிறேன், என தொடங்கும் அந்த பதிவை மருத்துவமனை படுக்கையில் இருந்தப்படி பகிர்ந்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து டிசம்பர் இறுதியில் வைரஸால் தாக்கப்பட்ட பல நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். இது சார்ஸ் வைரஸாக இருக்கலாம் என சந்தேகித்து இருக்கிறார். ஆனால், இது புதிய கொரோனா வைரஸ் என அவருக்கு தெரியவில்லை. பின்னர் கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி, சக மருத்துவர்களை எச்சரித்த அவர், முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தி இருக்கிறார். இந்த சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்கு பின்னர் வந்த பொது சுகாதார துறை அதிகாரிகள், சமூக ஒழுங்குக்கு விளைவிக்கும் இவ்வாறான பொய் தகவல்களை பகிர்வதை நிறுத்தும்படி கூறி, அவரிடமிருந்து ஒரு கடிதத்தையும் பெற்று சென்று இருக்கிறார்கள். பின்னர் போலீஸும் அவரை விசாரித்து, வதந்திகளை பரப்புவதை நிறுத்தும்படி கூறி இருக்கிறார்கள். இதனை ஜனவரி மாதம் பகிரப்பட்ட அந்த பதிவில் லீ குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த ஜனவரி 10-ம் தேதியிலிருந்து அவருக்கு தொடர் இருமல் ஏற்பட்டிருக்கிறது.

பின் சோதித்து பார்த்ததில் அவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது அரசு அதிகாரிகள் லீயிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இப்போது சீனாவில் லீ கதாநாயகனாக கொண்டாடப்பட்டு வருகிறார். சீன சமூக ஊடகமான வெய்போவில் இவரை பாராட்டி பலர் கருத்து தெரிவித்துள்ளனர். சீனாவின் சுகாதாரத் துறைக்கு லீ போன்ற லட்சக்கணக்கான மருத்துவர்கள் தேவை என குறிப்பிடும் அவர்கள் சீன சுகாதாரத் துறை குறித்த வருத்தங்களையும் பகிர்ந்துள்ளனர். இதேபோல், சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் சாங் யிங்கீ என்பவர் தொடர் சிகிச்சைகள் அளித்து வந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பின்னர் மக்கள் பலர் திரளாக அவருக்கு  அஞ்சலி செலுத்தினர் என குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்