இன்று முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 வழங்குகிறது-புதுச்சேரி அரசு

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இன்று முதல்  அவரவர் வங்கி கணக்கில் ரூ.2000  செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று  நடைபெற்றது.இதில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் அம்மாநில முதல்வர் நாராயணசாமி, ஏப்ரல் – ஜூன் வரையிலான 3 மாத செலவினங்களுக்காக ரூ.2042 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து இடைக்கால பட்ஜெட்டாக பேரவையில் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பேரவையில் உரையாற்றிய முதல்வர் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.பின்னர் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ரூ.995 கோடி நிதி வழங்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்த அவர் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவே புதுச்சேரி மக்களுக்கு அரசு உதவும் நோக்கில், அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் இன்று முதல் ரூ.2,000 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து  சட்டப்பேரவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

author avatar
kavitha