திறக்கப்பட்ட சென்னை அழகு நிலையங்களுக்கு நிபந்தனைகள்!

சென்னையில் திறக்கப்பட்ட அழகு நிலையங்கள் சலூன்கள் மற்றும் முடிதிருத்தும் நிலையங்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சில நிபந்தனைகளை அரசு ஆணையிட்டுள்ளது.

வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் சென்னையில் தான் அதிகம் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இரண்டு வாரத்திற்கு முன்பே சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், சென்னையில் நேற்று தான் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், திறக்கப்பட்ட அழகு நிலையங்கள் முடி திருத்தும் கடைகள் ஆகியவற்றுக்கு அரசு சில நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி நுழைவு வாயிலில் சோப்பு மற்றும் தண்ணீர் வைத்துக் கொள்வதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும் எனவும், அழகு நிலையங்களுக்கு அவர்களின் பெயர் முகவரி கைபேசி எண் மற்றும் ஆதார் அடையாள விவரங்கள் ஆகியவை பதிவேட்டில் குறிக்கப்பட வேண்டும்.

வேலை செய்பவர்கள் தங்களது கைகளை துடைப்பதற்கு நாப்கின் வைத்திருப்பதோடு அவைகளை பாதுகாப்பாக அகற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பணியாற்றும் கடை உரிமையாளர்களும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் பணியினை துவங்குவதற்கு முன்பு தங்களது கைகளை கழுவிக்கொண்டு சுத்தமாக வாடிக்கையாளரை கவனிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடைக்கு வருபவர்களும் சரி உரிமையாளர் பணியாளர்களும் சரி அனைவரும் முக கவசம் மற்றும் கையுறை கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும். அடிக்கடி மூக்கு வாய் மற்றும் கண்களை தொடுவதை தவிர்க்கவேண்டும். காய்ச்சல் அல்லது இருமல் சளி இருப்பவர்கள் பணிக்கு செல்ல கூடாது எனவும் உறுதியாக கூறப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் வருவதை தவிர்ப்பதற்காக இயன்ற வரை முன்பதிவு அடிப்படையில் சேவைகள் தொடர வேண்டும் மற்றும் சமூக விலகல்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டுமென அழகு நிலையங்கள் மற்றும் சலுகைகளுக்கு நிபந்தனைகளுடனான ஆணை தமிழக அரசால் வெளியாகியுள்ளது.

author avatar
Rebekal