இங்கு யார் கோமாளி?! ஜெயம் ரவியின் கோமாளி பட விமர்சனம் இதோ!

ஜெயம் ரவி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி உள்ளார். வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்து உள்ளார். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்து உள்ளார்.

 

இந்த படத்தின் கதை ட்ரெய்லரில் காண்பித்தது போல 16 வருடம் கோமாவில் இருந்து மீண்டு எழும் ஒரு இளைஞன் பார்க்கும் புதிய விஷயங்களும், அவன் கடந்து போகும் ஒவ்வொரு காட்சியிலும் தற்கால குழந்தைகள் எதனை எல்லாம் இழந்து வருகிறார்கள் என வெளிச்சம் போட்டு  காண்பிக்கிறது.

கதையின் நாயகன் ஜெயம் ரவி வழக்கம் போல தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் ரவியின் இளமை பருவ ஸ்கூல் காட்சிகள் எல்லாம் அபாரம். அந்த தோற்றத்தில் பார்க்கும் போது 2003இல் வெளியான ஜெயம் ரவியின் முதல் படத்தில் உள்ளதை விட இளமையாக உள்ளார். அதில் வரும் காட்சிகள் நிச்சயம் அனைவரையும் கவரும். நமது பள்ளிப்பருவ நினைவுகளை தூண்டிவிடும்.

 

அடுத்து ஜெயம் ரவிக்கு ஈடுகொடுக்கும் இன்னொரு கதாபாத்திரம் ஜெயம் ரவியின் மச்சான் யோகி பாபு ( ரவியின் தங்கச்சி கணவராக). இவருடைய நடிப்பு காமெடியை தாண்டியும் அசத்தலாக உள்ளது. சம்யுக்தா ஹெக்டே சிறப்பான அறிமுகம். காஜல் அழகாக இருக்கிறார். டாக்டர் கதாபாத்திரம் நன்றாக உள்ளது.

படத்தின் இன்னொரு ஹீரோ ஹிப்ஹாப் ஆதிதான். இசை தாறு மாறு. ஒவ்வொரு காட்சியிலும் பின்னணி இசை சூப்பர். அதிலும் க்ளைமேக்ஸ் பின்னணி இசைஅபாரம். பாடல்கள் ஏற்கனவே ரிலீசாகி ஹிட்டானதால் ( படத்தின் முதல் ப்ரோமொஷனே பாடல்கள் தான்) பார்க்கும் போது அற்புதமாக இருக்கிறது. நட்பை பற்றிய பாடல் அருமை.

படத்தின் ப்ளஸ் முதல் பாதி காமெடி கலகலப்பாக நகர்கிறது. க்ளைமேக்ஸ் காட்சி நம்மை சிந்திக்க வைக்கிறது. மைனஸ் இரண்டாம் பாதி கொஞ்சம் இழுபறியாக இருப்பது. திரைக்கதை குழப்பம் இருந்தும் க்ளைமேக்ஸ் மூலம் ரசிகர்களை திருப்திபடுத்தி பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார் அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.