3-வது முறையாக ஆளுநரை சந்தித்த முதல்வர்.. பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் முயற்சி..!

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி,  தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதனால், சச்சின் பைலட் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் மீது தகுதி நீக்க நோட்டீஸை ராஜஸ்தான்  சபாநாயகர் அனுப்பினார்.

இதை எதிர்த்து, சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தான்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த  உயர் நீதிமன்றம் , சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என கூறியது.

இதனைதொடர்ந்து ராஜஸ்தான் சட்டமன்றத்தை கூட்டி, தனது பெரும்பான்மையை காட்ட அசோக் கெலாட் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், கொரோனா காரணமாக சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் மறுப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் அங்கு உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளனர். இதையடுத்து,இன்று   நான்கு பேருந்துகளில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆளுநர் மாளிகைக்கு சென்றார் .

அங்கு ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் காத்திருந்தனர். அப்போது, சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என எம்.எல்.ஏக்கள் கோஷம் எழுப்பினர். இதற்கிடையில் ஆளுநர் உடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து பேசினார்.

வருகின்ற திங்கள்கிழமை முதல் ஒரு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டி தங்கள் பெரும்பான்மையை காட்ட அசோக் கெலாட் முயற்சி செய்து வருகிறார். கடந்த 2 வாரங்களாக அதிருப்தி எம்எல்ஏக்களால், ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் மூன்றாவது முறையாக முதல்வர் அசோக் கெலாட் ஆளுநரை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.