#BREAKING : சிதம்பரம் வழக்கில் அரை மணி நேரத்தில் தீர்ப்பு

ஐஎன்எக்ஸ்  மீடியா வழக்கில் நேற்று டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வைத்து  முன்னாள் மத்திய நித்தியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.நேற்று இரவு முதலே சிபிஐ சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியது .இதனையடுத்து விசாரணைக்கு பிறகு டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ சிதம்பரத்தை ஆஜர்படுத்தினார்கள்.

Image

நீதிபதி அஜய்குமார் முன்னிலையில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.சிபிஐ தரப்பில் ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மனு அளிக்கப்பட்டது.சிபிஐ தரப்பில் துஷர் மேத்தா வாதிடுகையில் ,ஜாமினில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டே சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். அமைதியாக இருப்பது அரசியல் சாசன உரிமை , ஆனால் சிதம்பரம் அமைதியாக இருந்து அனைத்து கேள்விகளையும் தவிர்த்து வருகிறார் .அந்த கேள்விகளுக்கு அவர் மட்டுமே பதிலளிக்க முடியும் என்று வாதிட்டார்.காவலில் எடுத்து விசாரிக்கும் போது மட்டுமே முழுமையான விசாரனை சாத்தியம் என்றும் தெரிவித்தார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நிலையில் உள்ளோம், விசாரணைக்கு தேவையான ஆவணங்களை சிதம்பரம் கொடுக்கவில்லை, குறிப்பிட்ட கேள்விகளுக்கு பாதுகாப்பு என்ற நிலையில் இல்லாத போதுதான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதிலளிப்பார்கள்.

சிதம்பரம் தரப்பில் கபில் சிபல் வாதிட்டார்.அவரது வாதத்தில்,  வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் ஜாமினில் உள்ளார் .மற்றொருவரான பட்டய கணக்காளர் பாஸ்கரன் முன் ஜாமின் பெற்றுள்ளார்.

முதலீடுகளை அனுமதித்த உத்தரவை FIPB அமைப்பில் இருந்த 6 செயலாளர்கள் வழங்கினார்கள். ஆனால் அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.10 ஆண்டுகள் கழித்தே இந்த வழக்கில் எப்ஐஆர்  (FIR )போடப்பட்டது . செயலாளர்கள் அனுமதி வழங்குவதற்கான பரிந்துரையை வழங்கிய பின்னரே நிதியமைச்சர் ஒப்புதல் வழங்கினார்.

ஒரே ஒரு நாள் மட்டுமே சிதம்பரத்திடம் விசாரணை செய்தார்கள் விசாரிக்கும் தேவை இருந்தால் மீண்டும் அழைத்திருக்கலாம் சி.பி.ஐ. அழைப்பை சிதம்பரம் ஒருபோதும் நிராகரித்ததில்லை என்று வாதிட்டார் .பின் சிதம்பரத்திற்கு எப்போது சம்மன் அனுப்பினீர்கள் என சிபிஐ தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சிதம்பரம் தரப்பில் அபிஷேக் சிங் மன்வி வாதிட்டார்.அவரது வாதத்தில்,சி.பி.ஐ.க்கு தேவை சிதம்பரத்தின் பதிலா ? அல்லது அவர்கள் விரும்பும் பதிலா என்று கேள்வி எழுப்பினார்.ஒத்துழைப்பு தராமை ,சாட்சியங்களை அழிக்க முயல்தல் , தப்பிச் செல்லுதல் இந்த மூன்று விஷயங்களுமே சிதம்பரத்தின் வழக்கில் இல்லை எனும் போது கைது நடவடிக்கை அவசியமற்றது என்று வாதிட்டார். சுமார் 1.30 மணி நேரமாக வாதம் நடைபெற்றது. வாதங்களை கேட்ட நீதிபதி அரைமணி நேரம் கழித்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்று அறிவித்தார்.