#BREAKING: ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீதான வழக்கு -விசாரணையை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்

#BREAKING: ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீதான வழக்கு -விசாரணையை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்

  • பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 
  • பன்னீர்செல்வம்  உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை முடித்து வைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில்  ஓ.பன்னீர்செல்வம் அணி  சட்டசபையில்  முதலமைச்சர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது.அந்த நேரத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்கு அளித்தனர்.இந்த விவகாரம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்,பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று  தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தங்க தமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

ஆனால் இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதால், விரைந்து விசாரிக்க வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கை விரைவாக விசாரிக்க கோரி திமுக  மனுதாரரகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.இதன் படி விசாரணை நடைபெற்றது. அப்பொழுது ,தகுதிநீக்கம் செய்யக்கோரிய மனு மீது சபாநாயகர் தாமதம் காட்டியது ஏன் ? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது .இந்த விவகாரத்தில் 3 ஆண்டுகள் காலதாமதம் என்பது தேவையற்றது என்று தெரிவித்தது.திமுக மனு மீது  சபாநாயகர் எடுத்த நடவடிக்கைள் என்ன என்பதை பதில் தர சட்டப்பேரவை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கினை பிப்ரவரி 14-ஆம் தேதி ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.எனவே வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.அப்பொழுது,சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது என்று சபாநாயகர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இதன் பின் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்றும் சபாநாயகர் உரிய முடிவு எடுப்பார் என்று நம்புவதாக கூறி  வழக்கின் விசாரணையை முடித்து வைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Join our channel google news Youtube