Breaking:தமிழகத்தில் திறக்கப்பட்ட 1,300 மதுக்கடைகளை மீண்டும் மூடக்கோரிய மனு தள்ளுபடி!

தமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட 1300 மதுக்கடைகளை மூடக்கோரி பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்  மாநில நெடுஞ்சாலைகளை, கிராமசாலைகளாக, நகரச்சாலைகளாக மாற்றமால் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து உத்தரவிட்டது. பாமக வழக்கறிஞர் பாலு சாலைகளை மாற்றாமல் டாஸ்மாக் கடைகளை திறப்பதாக வழக்கு தொடர்ந்தார்.

கடந்த ஆண்டு பாமக தொடர்ந்த வழக்கில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள தேசிய , மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி, ஊராட்சி உட்பட உள்ளாட்சி அமைப்புகளிடம் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதன் மூலம் உச்சநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்து திறந்தது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் கே.பாலு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் சாலைகளை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் எனவும் பிறகு டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் எனவும் உத்தரவிட்டனர்.

ஆனால் தமிழக அரசு சாலைகளை பெயர் மாற்றாமலே டாஸ்மாக் கடைகளை திறப்பதாக வழக்கறிஞர் பாலு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாநகரத்தில் உள்ள சாலைகளை பெயர் மாற்றாமலே திறந்த கடைகளை மூடவும், மேலும் உள்ளாட்சி அமைப்பு சாலைகளாக மாற்றாமல் டாஸ்மாக் கடைகளை திறக்கவும் உயர்நீதிமன்றம் தடைவிதித்தது.

இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகளை மூடும் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. நகராட்சிகளில் மதுக்கடைகளை திறக்கலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என தமிழக அரசு வாதம் செய்தது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் 1300 மதுக்கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தமிழக அரசு கூறியது.

பின்னர் உச்சநீதிமன்றம் சென்று அந்த 1300 கடைகளை திறக்கவும் தமிழக அரசு அனுமதி பெற்றது. இந்நிலையில் தற்போது அந்த 1300 கடைகளை மூடக்கோரி உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் பாலு வழக்கு தொடர்ந்துள்ளார். டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவு சட்ட விரோதமானது என பாமக தரப்பு வழக்கறிஞர் மனுவில் கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட 1300 மதுக்கடைகளை மூடக்கோரி பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.நெடுஞ்சாலை மதுக்கடைகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மனுவை தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment