ஏப்ரல் 14க்கு பிறகு பயணிப்பவர்களுக்கு ரயில், விமானம் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவை மிரட்டி வருகிறது. இந்தியாவில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில், நாடு முழுவதும் கடந்த 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸின் 3வது கட்டமான சமூக பரவலை தடுக்கும் நோக்கில், அரசு மற்றும் சுகாதாரத்துறையினர் இரவு, பகலாக போராடி வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், ரயில், விமான, பேருந்து சேவை மற்றும் அதிக மக்கள் கூடுவதற்கு உகந்ததாக இருக்கும் அனைத்தையும் முடக்கியது. இதனால் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் விளைவு காரணமாக ரயில், விமானப் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் முன்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், ரயில், விமானங்களில் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு பயணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதனிடையே ஏப்ரல் 14ம் தேதி வரை இருக்கும் ஊரடங்கு உத்தரவு நீடிப்பது குறித்து முடிவு இல்லை என மத்திய அரசு தெரிவித்தது. அதனால் ரயில், விமானங்கள் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது என்றும் இது தற்போதைய நிலவரப்படி தொடங்கியுள்ளதாகவும், ஊரடங்கு நீடிப்பது குறித்து உத்தரவு வந்தால் பின்னர் அறிவிக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்