பேர்ஸ்டோவ் சதம் விளாசல்: கோப்பை வென்றது இங்கிலாந்து

சவுத்தாம்ப்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் பேர்ஸ்டோவ் சதம் விளாச, இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பை கைப்பற்றியது.
இங்கிலாந்து சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகள் முடிவில், இங்கிலாந்து ஏற்கனவே 3-0 என தொடரை வென்றிருந்தது. கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன் ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
ஹோப் ஆறுதல்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெய்ல் (40), ஹோப் (33) ஓரளவு கைகொடுத்தனர். ஷாய் ஹோப் (72) அரை சதம் கடந்தார். மொயீன் அலி ‘சுழலில்’ சாமுவேல்ஸ் (32) சிக்கினார். கேப்டன் ஜேசன் முகமது 25 ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. சுனில் அம்பிரிஷ் (38), ஆஷ்லே நர்ஸ் (31) அவுட்டாகாமல் இருந்தனர்.
பேர்ஸ்டோவ், ஜேசன் அபாரம்:
எட்டிவிடும் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஜோடி அபார துவக்கம் தந்தது. ஜோசப் பந்துவீச்சில் ஜேசன் தொடர்ந்து இரண்டு பவுண்டரி அடித்தார். சாமுவேல்ஸ் பந்தை பேர்ஸ்டோவ் பவுண்டரிக்கு விரட்டினார்.
முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்தபோது, ஜேசன் (96) சத வாய்ப்பை தவறவிட்டார். தொடர்ந்து அசத்திய பேர்ஸ்டோவ் இரண்டாவது சதம் கடந்தார். இவருக்கு ஜோ ரூட் ஒத்துழைப்பு அளிக்க வெற்றி எளிதானது. முடிவில், இங்கிலாந்து அணி 38 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம், ஒரு நாள் தொடரை இங்கிலாந்து அணி 4-0 என கைப்பற்றியது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment