கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம் கழுத்தை அறுத்து கணவனை கொன்ற மனைவி, தாய்மாமனுடன் கைது

பல்லாவரம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தாய்மாமனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை அறுத்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். சென்னை போரூர் அருகே உள்ள மவுலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (29). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு நதியா (23) என்ற மனைவியும், கோபிகா (5), பவ (3) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். அன்பழகன் தனியார் நிறுவன ஊழியர் என்பதால் காலை 8.30 மணிக்கே பணிக்கு புறப்பட்டு சென்றுவிடுவார். பின்னர், இரவு 9 மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வருவார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 17ம் தேதி ேவலைக்கு சென்ற கணவன் அன்பழகனை காணவில்லை என்று மாங்காடு காவல் நிலையத்தில் மார்ச் 20ம் தேதி நதியா புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகனை தேடி வந்தனர். ஆனால், அன்பழகனை காணவில்லை என்ற புகார் கொடுத்துவிட்டு சென்ற நதியா, அதன்பின்னர் காவல் நிலையம் பக்கமே எட்டி பார்க்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அன்பழகன் வீட்டிற்கு சென்று நதியாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கணவன் காணாமல் போனது குறித்து எந்த வருத்தமும் இல்லாமல் பதிலளித்துள்ளார். இதனால், போலீசார் மேலும் சந்தேகம் வலுத்தது.

மேலும், விசாரணை தொடர்பாக நதியாவிடம் சில தகவல்களை கேட்க போலீசார் அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவரது எண் எப்போதும் பிசியாக இருந்தது. இதனால் நதியா நடவடிக்கை மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்து அவரை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, நதியா, அவரது தாய் மாமன் நாகராஜூடன் பல இடங்களுக்கு சென்று வந்ததும், இருவருக்கும் கள்ளத்தொடர்பு உள்ளதும் போலீசாருக்கு ெதரியவந்தது. இதையடுத்து போலீசார் நதியாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.விசாரணையில் நதியா வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது:
நதியா திருமணத்திற்கு முன்பே தாய்மாமன் நாகராஜை காதலித்து வந்துள்ளார். இருவரும் பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். இதுகுறித்து நதியாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. நாகராஜ் வேலை இல்லாமல் சுற்றி திரிந்து வந்ததால் நதியாவின் பெற்றோர் நாகராஜூக்கு மகளை திருமணம் ெசய்து கொடுக்க விரும்பவில்லை. இதையடுத்து அன்பழகன் என்பவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு நதியாவை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இதற்கிடையே திருமணம் செய்த பிறகும் நதியா தனது தாய் மாமன் உடனான தொடர்பை தொடர்ந்துள்ளார். சில ஆண்டுகள் அன்பழகனுக்கு இந்த விவகாரம் தெரியாது.

கடந்த 8 மாதங்களாக நாகராஜ் வீட்டிற்கு வந்து செல்வது குறித்து குழந்தைகள் மூலம் அன்பழகனுக்கு தெரியவந்தது. அதைப்பற்றி மனைவியிடம் அவர் கேட்டபோது பெங்களூரில் வேலை செய்து வரும் தாய்மாமன் நாகராஜ் சென்னைக்கு வந்ததால், என்னை பார்த்து விட்டு சென்றார். மற்றபடி ஒன்று இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், அன்பழகனுக்கு மனைவி மேல் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரது மனைவியை தீவிரமாக கண்காணித்துள்ளார். மேலும், பகல் நேரத்தில் மனைவிக்கு போன் செய்துள்ளார். அப்போது அவரது போன் எப்போதும் பிஸியாக இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அன்பழகன் மனைவி நதியாவிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த அன்பழகன் மது குடிக்க ஆரம்பித்தார்.

இதுகுறித்து நதியா அவரது தாய்மாமன் நாகராஜிடன் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும், கள்ளதொடர்புக்கு இடையூறாக உள்ள அன்பழகனை கொலை செய்து விட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி, நாகராஜை பெங்களூரில் இருந்து வரவழைத்து அன்பழகனுடன் பேச வைத்துள்ளார் நதியா. அன்பழகன் மதுவுக்கு அடிமையானதால் நாகராஜ் மது வாங்கி கொடுத்து எனது நண்பர் ஒருவரை பார்க்க வேண்டும். நீங்கள் உடன் வாருங்கள் என்று அழைத்துள்ளார். அதை நம்பிய அன்பழகன் கடந்த மார்ச் 17ம் தேதி மனைவி நதியாவுடன் சென்றுள்ளார். வந்தவாசி அருகே சென்று கொண்டிருந்த இருவரும் மதுஅருந்த முடிவு செய்துள்ளனர். இதனால், வந்தவாசியில் உள்ள மலைபுதரில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதும் அன்பழகன், தனது மனைவியுடனான கள்ளக்காதலை விட்டு விடும்படி நாகராஜை மிரட்டியுள்ளார்.

அதற்கு நாகராஜ் நான் காதலித்த பெண்ணை தான் உனக்கு திருமணம் செய்து வைத்தனர். நீ தான் விலகி செல்ல வேண்டும் என்று கூறி அன்பழகனை தாக்கியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த நாகராஜ், மறைந்து வைத்திருந்த கத்தியை எடுத்து அன்பழகனின் கழுத்து அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், அங்கேயே புதைத்துவிட்டும் நாகராஜ் மற்றும் நதியா இருவரும் சென்னக்கு திரும்பியுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் நதியா மற்றும் நாகராஜை கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தாய்மாமனுடன் சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சடலம் இன்று தோண்டி எடுப்பு
கொலை செய்யப்பட்ட அன்பழகனின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக, வந்தவாசியில் மலை புதரில் புதைக்கப்பட்ட அன்பழகனின் சடலத்தை தாசில்தார் முன்னிலையில் இன்று தோண்டி எடுக்க உள்ளனர். இதற்காக நதியா மற்றும் நாகராஜை போலீசார் வந்தவாசிக்கு அழைத்து சென்றுள்ளனர். 

author avatar
Castro Murugan

Leave a Comment