பயிற்சியாளர் நியமனம்: பிசிசிஐ திடீர் பல்டி

டெல்லி :கங்குலி தலைமையிலான தேர்வுக்குழு தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை தேர்வு செய்தற்கு மட்டுமே ஒப்புதல் வழங்கியிருக்கிறது பிசிசிஐ நிர்வாகக் குழு.
அதேநேரத்தில் இந்திய அணி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடர்களில் விளையாடும்போது திராவிட் பேட்டிங் பயிற்சியாளராகவும், ஜாகீர்கான் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டது தொடர்பாக நிர்வாகக் குழு எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.
தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் விவாதித்த பிறகே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய், உறுப்பினர் டயானா எடுல்ஜி, பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
அப்போது தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஊதியத்தை நிர்ணயம் செய்வதற்காக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா, தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி, நிர்வாகக் குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி, பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதே குழு, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் நியமனம் குறித்து ரவி சாஸ்திரியுடன் ஆலோசித்து முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 பேர் கொண்ட குழு வரும் 19-ஆம் தேதி கூடுகிறது. அந்தக் குழு தங்களது பரிந்துரைகளை வரும் 22-ஆம் தேதிக்குள் பிசிசிஐ நிர்வாகக் குழுவிடம் அளிக்க வேண்டும்.

author avatar
Castro Murugan

Leave a Comment