தமிழர் உரிமை மாநாட்டு வரவேற்ப்புக் குழு மற்றும் தயாரிப்பு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

                                                தூத்துக்குடி:ஆகஸ்ட் 19 நடக்க உள்ள தமிழர் உரிமை மாநாட்டின் வரவேற்ப்புக் குழு அமைப்பு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கீழடி என்பது 3500 வருடங்களுக்கு முந்தய நாகரிகம் ஆகும். இது சுமார் 150 ஏக்கர் நிலபரப்பினை கொண்டது.  ஆனால் இதில் வெறும் 5 ஏக்கர் மட்டுமே அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. கீழடி முழுமையாக அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டால் ஆரியர்களும் தமிழர்களும் வேறு என தெரிய வரும். இதனால் மத்திய அரசாங்கம் இதனை முழுமையாக ஆராய்ச்சி செய்ய அனுமதி தரவில்லை. மேலும் இதனை ஆராய்ச்சி செய்த அதிகாரியை குஜராத்மாநிலத்துக்கு இடமாற்றம் செய்தது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கம் இணைந்து திங்களன்று (ஜூன் 26) சென்னையில் தமிழர் உரிமை மாநாடு நடத்தின. இதன் நிறைவு அமர்வாக நடைபெற்ற ‘பன்முகப் பண்பாட்டுப் பாதுகாப்பு மேடை’ எனும் நிகழ்வில் மாநாட்டுப் பிரகடனத்தை வெளியிட்டு தமுஎகச பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் பேசியது வருமாறு:இந்தி திணிக்கப்பட்ட போதெல்லாம் எதிர்ப்பின் அடையாளமாக நின்று இந்தியாவிற்கு தமிழகம் தலைமை தாங்கியது.

மொழிப் போரில் தமிழகத்திற்கு இணையாக வேறு எந்த மாநிலமும் குருதி சிந்தவில்லை. இன்றைக்கு மூன்றாவது மொழிப்போர் காலத்தில் நிற்கிறோம். இந்தி திணிப்பு எதிர்ப்பும் தமிழ் வளர்ச்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.இந்தியை தவிர மற்ற மாநில மொழிகளை இரண்டாம்பட்சமாக மாற்றும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் சீறி கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும். அரசியல் அரங்கிலும் பெரிதாக எதிர்ப்பு இல்லை. தமிழ்ச் சமூகம், ஊடகம், அறிவுச்சமூகம், அரசியல் சக்திகள் கூடுதலாக கிளர்ந்தெழ வேண்டும். ஆட்சி மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 117 பரிந்துரைகளையும் பின்னுக்குத் தள்ளும் வகையில் இந்தி பேசாத மாநிலங்களில் போராட்ட நெருப்பை பற்ற வைக்கும் மகத்தான பணியை இந்த மாநாடு செய்யும்.நெடுவாசலில் தோண்டாதே என்றால் தோண்டுகிறார்கள்.
கீழடியில் தோண்டு என்றால் மறுக்கிறார்கள். தமிழகத்தில் நகர நாகரிகம் இருந்ததற்கான தடயம் கீழடியில் கிடைத்துள்ளது. திராவிட நாகரிகம் குறித்து இதுவரையில் இருந்த கருத்துக்களை கீழடி அகழாய்வு மாற்றி அமைக்கும். எனவேதான் அதைக்கண்டு பயப்படுகிறார்கள்.கங்கைக் கரையி லிருந்தும், சரஸ்வதி நதிக் கரையிலிருந்தும் வரலாற்றை எழுதாமல், வைகையின் கரையிலிருந்து எழுது என்று கீழடி சொல்கிறது. எனவேதான் வரலாற்றைக் கண்டு பாசிஸ்ட்டுகள், மதவெறியர்கள், சாதி வெறியர்கள் அஞ்சுகிறார்கள். வரலாற்றுக்கு எதிரான யுத்தத்தை தொடுக்கிறார்கள்.கீழடியில் அகழாய்வு தொடங்கிய அதே நாளில்தான் குஜராத்தில் மோடி பிறந்த வாட்நகரில் அகழாய்வு தொடங்கியது. 2015-16ல் கீழடியில் 2300 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. வாட் நகரில் ஒருபொருள் கூட கிடைக்கவில்லை. எனவே வாட்நகரில் அகழாய்வு தேவையில்லை என்று கூறிய அதன் அதிகாரி மதுல்கா சமர்நாத் மாற்றப்பட்டார். கீழடியில் அகழ்வாராய்ச்சி தொடர கோரிய அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டார்.
அவர்கள் விரும்புகிற வரலாற்றை எழுத நினைக்கிறார்கள். அதனை ஒரு போதும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.தமுஎகச எழுப்பிய குரல் அதிரவைத்தது. சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவம் சார்ந்த ஒரு வழக்கில் 1 கோடி ரூபாய் அபராதம் விதித்து அதை கீழடி அகழாய்வுக்கு வழங்க உத்தரவிட்டது. அப்போது கூட சட்டமன்றத்தில் இருப்பவர்களுக்கு உறைக்கவில்லை.கீழடியில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களில் 10 மாதிரிகளை அமெரிக்காவிற்கு அனுப்பி வேதியியல் கரிம ஆய்வு செய்ய மத்திய அரசு மறுத்தது. அரசிடம் பணம் இல்லாததால் 2 மாதிரிகளை ஆய்வு செய்தால் போதும் என்கிறது. ஒரு மாதிரிக்கு 50ஆயிரம் ரூபாய் செலவாகும். அதேநேரம் அயோத்தியில் ராமர் அருங்காட்சியகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கி இருப்பது 151 கோடி ரூபாய்.தென்னிந்தியாவின் பல மொழிகள் சமஸ்கிருதத்தோடு கலந்த மொழிகள். மலையாளம், கன்னடத்திலிருந்து சமஸ்கிருதத்தை பிரித்துவைக்க முடியாது. ஆனால் சமஸ்கிருதத்திலிருந்து தனித்த மொழிக்குடும்பமாக 2ஆயிரம் வருடமாக தமிழ் உள்ளது. எனவேதான் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது.
சமஸ்கிருதத்திற்கு எதிராக நடைபெறும் இந்தப் போராட்டம் வரலாறு நெடுகிலும் நடந்து வருகிறது. சமஸ்கிருதத்தை மறுக்கிற அடையாளமும், வேரும் தமிழகத்தில் உள்ளதால்தான், சமஸ்கிருதத்தை உள்ளீடாகக் கொண்ட இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்.“ஹரப்பா, மொகஞ்சதாரோ கண்டுபிடிக்கப்பட்ட போது, நாகரிகத்தை அறியாத காட்டுமிராண்டிகள் சிந்துவெளி நாகரிகத்தை அழித்தார்கள். அதனால்தான் அதைப்போன்ற ஒரு நகரத்தை அவர்களால் கட்டமைக்க முடியவில்லை. அடுத்த ஆயிரம் ஆண்டுகளும் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு வேதப் பாடல்களை பாடித்திரிந்தார்கள்” என்று டி.டி.கோசாம்பி கூறினார். அன்றைக்கு செங்கல்லை கண்டு பயந்த கூட்டம், இன்றைக்கு கீழடி செங்கல்லை கண்டு அஞ்சுகிறது.தமிழகம் எழுத்துக்களின் தாயகம்.
உலகில் அதிக கல்வெட்டுக்கள் கிடைத்துள்ள நாடு இந்தியா. அதன் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம். இவற்றில் 64,000 கல்வெட்டுக்கள் தமிழகத்திலிருந்து மட்டும் கிடைத்துள்ளது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட 72 பானை ஓடுகளில் தமிழ் எழுத்துகள் உள்ளன. சங்க இலக்கியத்தில் இல்லாத இறைவாதன், மாடத்தி உள்ளிட்ட பெயர்கள் அதில் உள்ளன.இந்தி திணிப்பு எதிர்ப்பு, கீழடி ஆய்வு இரண்டையும் பண்பாட்டின் இரு அடையாளங்களாக பார்க்கிறோம். தமிழ்மொழி, பண்பாடு, வரலாறு அழிக்கப்படும்.ஆகவே நமது மொழி மற்றும் பண்பாட்டை பாதுகாக்க நாம் அணிதிரள வேண்டும்.

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 30ஆம் தேதி ஒரு கருத்தரங்கம் நடைபெறயுள்ளது.இக்கருத்தரங்கில் மாவட்டம் முழுவதுமிருந்து சுமார் 500 பேரை பங்கேற்க வைப்பது ,மேலும் மாநாட்டினை விளம்பரப்படுத்த ஒவ்வொரு பகுதிகுழு சார்பாகவும் 15 இடங்களில் சுவர் விளம்பரம் செய்வது எனவும்,வரும் 18ஆம் தேதி பாரதி மற்றும் உமறுபுலவர் நினைவு ஜோதியானது எட்டையபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாநாட்டு திடலுக்கு கொண்டுசெல்லப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது .

இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் , தமுஎகச மாவட்ட தலைவர் சிவனாகரன் ,செயலாளர் ஆனந்தன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ் பாண்டி,மாவட்ட தலைவர் அமர்நாத் ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்து மற்றும் தமுஎகச,SFI,DYFI நிர்வாகிகள் உட்பட சுமார் 50 பேர் பங்கேற்றனர் .

கீழடி,ஆதிச்சநல்லூர் மீண்டும் ஆராய்ச்சி செய்யவும் மேலும் அதில் கிடைக்ககூடிய பொருள்களை சேகரித்து அருங்காட்சியகம்அமைக்க வேண்டும் எனவும் , ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும், வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி பாளை திடலில் நடைபெறும்.   

author avatar
Castro Murugan

Leave a Comment