மூளையில் பிரச்சனை இருந்தால் கண்கள் காட்டிக் கொடுக்குமா?

ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடியாக கண்களைச் சொல்கிறோம். உடலின் உள் உறுப்புகளுக்குள் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அவற்றைக் கண்களில் தெரிகிற சில மாற்றங்களை வைத்துக் கண்டுபிடிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். அதேபோல், மூளையில் ஏற்படுகிற கோளாறுகளையும் கண்களை வைத்துத் தெரிந்துகொள்ள முடியும் என்பது தெரியுமா?
கண்களை மூளையோடு இணைக்கிற பகுதியான ஆப்டிக் நரம்பை வைத்தே மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்னையைக் கண்டுபிடித்துவிட முடியும். மூளையில் அழுத்தம் அதிகமானால், சிறிய குழந்தை களுக்குத் தலை வீங்கிக் கொண்டே போகும்.
அதன் பெயர் ஹைட்ரோகெபலாஸ்(Hydrocephalus) ஆப்டிக் நரம்பு வீங்கும். அதற்கு ஆப்டிக் டிஸ்க் இடிமா(Optic disc edema  (Papilloedema) என்று பெயர். இதை பாப்பிலிடிமா என்றும் சொல்வதுண்டு. பாப்பிலா என்றால் ஆப்டிக் நரம்பு என்று எளிமையாக நினைவு வைத்துக் கொள்ளலாம். இது இரண்டு கண்களையும் பாதிக்கும்.
இதற்கு மூளையில் உள்ள பிரஷரை குறைப்பதுதான் முதல் சிகிச்சை. குழந்தை கள், பெரியவர்கள் என யாருக்கு வந்தாலும் இதுதான் தீர்வு. சில நேரங்களில் அறுவை சிகிச்சைகூட தேவைப்படலாம். கட்டியினால் பிரஷர் அதிகமானால், அதை அறுவை சிகிச்சையோ, கீமோதெரபியோ, ரேடியேஷனோ கொடுத்துக் கரைக்க வேண்டியிருக்கும். அப்போது இந்த பிரஷர் தானாகக் குறைந்துவிடும்.
குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளையில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு, அதனால் கண்களை, மூளையோடு சேர்க்கிற பகுதி வீங்கும்போது ஒரு கண்ணை மட்டுமே பாதிக்கும். ரத்த அழுத்தம் மிக அதிகமானால் இரண்டு கண்களிலும் ஆப்டிக் டிஸ்க் இடிமா வரலாம்.
ஆக்சிஜன் சரியாகக் கிடைக்காமல், மூளையில் பிரஷர் அதிகமாகும். அதற்கு ஹைப்பாக்சிக் இஸ்கிமிக் என்கெஃபலோபதி என்று பெயர். Hypoxic ischemic encephalopathy என்ற இந்த பிரச்னையை சுருக்கமாக ஹெச்.ஐ.ஈ என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அறுவை சிகிச்சையில் மூளையில் உள்ள தண்ணீரை எடுத்துவிட்டு ஒரு குழாய் மாதிரியான அமைப்பு வயிற்றுக்குள் விடப்படும். ஆனால் ஆப்டிக் நரம்பு சிதைந்துவிடும். அதை ஆப்டிக் அட்ரோஃபி என்கிறோம்.ODD எனப்படுகிற ஆப்டிக் டிஸ்க் ட்ரூசன் என்கிற பிரச்னை மற்றும் ப்ளஸ் பவர் அதிகமிருந்தால்கூட கண்களை மூளையுடன் சேர்க்கிற பகுதி வீங்கினாற் போலத் தெரியலாம். இதனால் சில நேரங்களில் கண்களில் மாலைக்கண் பிரச்னை வரலாம். தலைவலி இருக்கலாம். ஆனால் அது பயப்படுகிற அளவுக்குப் பெரிய பிரச்னை அல்ல.
அதிக தலைவலி.. கண்ணாடி போட வேண்டும் என வருகிறவர்களுக்கும் விழித்திரையைப் பரிசோதித்துப் பார்க்கும்போது கண்களை மூளையுடன் சேர்க்கிற பகுதியில் வீக்கம் தெரியும். அது மூளையில் உருவாகியிருக்கும் கட்டியாகவும் இருக்கலாம். எம்.ஆர்.ஐ., சிடி ஸ்கேன் மூலம் அதைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். சாதாரண தலைவலி என வந்த பலருக்கும், அப்படி கட்டியைக் கண்டுபிடித்து, அவர்களது கண்களையும்
உயிரையும் காப்பாற்றி இருக்கிறோம்.
அதனால்தான் உடலுக்குள் நடக்கும் விஷயங்களைப் பிரதிபலிக்கிற கண்ணாடி என கண்களைச் சொல்கிறோம். விழித்திரையைப் பரிசோதித்து, ஆப்டிக் நரம்பையும் பார்த்து, மூளையில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாகவே அவர்களுக்குத் தலைவலியும், வாந்தியும் ஏற்பட்டதைக் கண்டுபிடிக்க முடியும்.
பிட்யூட்டரி சுரப்பியில் ஏதேனும் பிரச்னைகள் வந்தால் முதல் அறிகுறி தலைவலியாகவே வெளிப்படும். பக்கவாட்டுப் பார்வையிலும் பிரச்னைகளை உணர்வார்கள். கண்களை மூளையுடன் இணைக்கிற பகுதியில் நிச்சயம் வீக்கமும் இருக்கும். நீரிழிவினாலும், கண்களை மூளையுடன் இணைக்கிற ஆப்டிக் நரம்புக்கு ரத்தம் சப்ளை செய்கிற குழாயில் அடைப்பு இருந்தாலும், கண்களை மூளையுடன் சேர்க்கிற ஆப்டிக் நரம்பு பகுதி வீங்கும். இது ஒரு கண்ணை மட்டும் பாதிக்கும்.
மூளையில் பிரஷர் அதிகமாவதால் ஆப்டிக் நரம்பு வீங்கும்போது, அதன் பாதிப்பு 2 கண்களிலும் இருக்கும். ஒரு கண்ணில் மட்டும் ரத்த ஓட்டம் தடைபடுவதால் ஆப்டிக் நரம்பு பாதிக்கப்படுவதன் பெயர் இஸ்கீமிக் ஆப்டிக் நியூரோபதி. இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. அவற்றைப் பற்றியும், அவற்றின் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் பற்றியும் அடுத்த இதழில் விரிவாகப் பார்ப்போம்.

author avatar
Castro Murugan

Leave a Comment