கொட்டும் மழையில் பொதுமக்கள் முற்றுகை புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு

கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைக்கு மது ஏற்றி வந்த லாரி அதிகாரிகளால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

புதிய டாஸ்மாக் கடை

கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி– தோணுகால் ரோட்டில் ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கடைக்கு நேற்று மாலையில் லாரியில் மது பாட்டில்கள் கொண்டு வருவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் கடையின் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. பொதுமக்கள் மழையில் நனைந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய தமிழகம் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் அன்புராஜ், வர்த்தக அணி குழந்தைவேலு, பேச்சிமுத்து, ஒன்றிய செயலாளர் அதிகுமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கிரிபாலா, கிளை செயலாளர் குருபாதம் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் விரைந்து சென்று, முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தாசில்தார் உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
முன்னதாக பொதுமக்கள் போராட்டம் நடத்தியபோது, அங்கு மது பானங்கள் ஏற்றிய லாரி வந்தது. அங்கு பொதுமக்கள் கூடியிருந்ததைப் பார்த்ததும், அந்த லாரியை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்தனர்.
author avatar
Castro Murugan

Leave a Comment