எங்கள் உயிருக்கு ஆபத்து- சிறைவைக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அச்சம்!

தங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பெங்களூருவில் சிறை வைக்கப்பட்டிருக்கும் அம்மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் குஜராத் முதலமைச்சர் விஜய்ரூபானிக்கு, கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
குஜராத் மாநிலத்தில், வரும் 8 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், அண்மையில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் சங்கர்சிங் வகேலா அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்ததைத் தொடர்ந்து, மேலும் சில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியில் இருந்து விலகினர்.
அவர்களில் 3 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதனால் மாநிலங்களவைத் தேர்தலில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சிய காங்கிரஸ் கட்சி, எஞ்சிய 42 சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
அவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் பெங்களுரூவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், குஜராத் முதலமைச்சர் விஜய்ரூபானி, தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மாநிலங்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக வாக்களிக்க தலா 15 கோடி ரூபாய், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மற்றும் அதற்கான செலவுத்தொகை என ஏராளமான வாக்குறுதிகளை அக்கட்சியினர் வழங்குவதாகவும் குற்றம் சாட்டினர்.
சொகுசு விடுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் விவகாரத்தால், ஏற்கெனவே சர்ச்சை ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த குற்றச்சாட்டு மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் குஜராம் மாநிலம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூருவில் சொகுசு வாழ்க்கை வாழுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.,
author avatar
Castro Murugan

Leave a Comment