கங்குலி-ரவி சாஸ்திரி கடும் வாக்குவாதம்..இந்திய அணியில் பரபரப்பு

மும்பை: இந்திய அணி பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர்கானை நியமிப்பது தொடர்பாக சவுரவ் கங்குலிக்கும், ரவி சாஸ்திரிக்கும் நடுவே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ரவி சாஸ்திரியைவிட சேவாக்தான், இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு தகுதியானவர் என்பது கிரிக்கெட் ஆலோசனை குழு உறுப்பினர் கங்குலி கருத்து. ஆனால் அணியினரின் (கோஹ்லி) விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து ரவி சாஸ்திரியை நியமிக்க கங்குலியிடம் சக குழு உறுப்பினர் சச்சின்தான் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
சச்சின் கூறியதை தொடர்ந்து வேறு வழியில்லாமல் கங்குலியும் அதற்கு சம்மதித்தார். எனவேதான் நேற்று முன்தினம் தொடங்கிய இழுபறி நேற்று இரவு வரை நீடித்து ஒருவழியாக சாஸ்திரி பெயர் இறுதி செய்யப்பட்டது.

இரு பதவிகள்

அதேநேரம், கங்குலி, ஓரேடியாக கோஹ்லி விருப்பத்திற்கு அணியை தாரை வார்க்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானையும், வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் பேட்டிங் ஆலோசகராக டிராவிட்டும் செயல்பட வேண்டும் என்பதில் கங்குலி உறுதியாக இருந்தார். சாஸ்திரியால் அணிக்கு நல்ல பயிற்சி வழங்க முடியாது என்பதும், அவர் ஓவராக ஆடிவிடக் கூடாது என்பதும் கங்குலி எண்ணம்.
கங்குலி அதிரடி
ஜாகீர்கானும், டிராவிட்டும், கங்குலி கேப்டனாக இருந்தபோது அணியில் ஆடியவர்கள். எனவே அவர்கள் திறமை குறித்து கங்குலிக்கு நன்கு தெரியும். இதனால் ஜாகீர் கானை பவுலிங் கோச்சாக நியமிப்பதில் அவர் உறுதி காட்டியுள்ளார்.
ஸ்கைப்பில் மோதல்
ஆனால் குடும்பத்தோடு பேங்காங்கிலுள்ள ரவி சாஸ்திரியோ, ஸ்கைப் மூலம், கங்குலியுடன் ஆலோசித்தபோது, இந்த முடிவை எதிர்த்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்ததாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.

அனுபவ ஜாகீர்
38 வயதாகும் ஜாகீர்கான் 92 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 311 விக்கெட்டுகளையும், 200 ஒருநாள் போட்டிகளில் ஆடி 282 விக்கெட்டுகளையும் வீழ்த்திய, இந்தியா கண்ட மிகச்சில சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகும். ஆனால் ரவி சாஸ்திரியோ பரத் அருண் என்பவரை பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்க அடம் பிடித்துள்ளார். இருப்பினும் கங்குலி விரும்பியது நடந்துள்ளது.
author avatar
Castro Murugan

Leave a Comment