டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை? அமெரிக்கா ஆலோசனை!

இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவிழும் சீன செயலிகளை தடை செய்வதற்கான ஆலோசனை நடந்து வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

லடாக், கல்வான் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம், நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது.

இதன்காரணமாக, டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அந்த செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில், சீன செயலிகள் மூலம் பயனர்களின் தகவல்கள் பாதுகாப்பாக இல்லை என கூறப்படும் நிலையில், இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவும் டிக் டாக் உட்பட சீன செயலிகளை தடை செய்வதற்காக ஆலோசனையை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர், “நான் அதிபர் டிரம்புக்கு முன்னால் இதனை வெளியிட விரும்பவில்லை, ஆனால் நாங்கள் அதுகுறித்து ஆலோசித்து கொண்டிருக்கிறோம்” என மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.