தமிழகம் – புதுச்சேரி இடையே பேருந்து சேவை ! தமிழக அரசு அனுமதி

தமிழகம் – புதுச்சேரி இடையே பேருந்து சேவை ! தமிழக அரசு அனுமதி

தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கலாம் என்று  தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பல மாதங்களுக்கு மேலாக மக்கள் சிரமப்பட்டனர்.மேலும் உண்மையான காரணங்கள் கூறினால் கூட இ-பாஸ் மறுக்கப்படுவதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து மாவட்டங்களுக்கு இடையான இ-பாஸ் நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்தது.

இதனிடையே கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.குறிப்பாக மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்கு உள்ளே சரக்கு உள்ளிட்ட போக்குவரத்துக்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. அதுமட்டுமில்லாமல், இதற்காக எவ்வித அனுமதியோ, இ-பாஸ் உள்ளிட்டவையோ தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

இந்நிலையில் தமிழகம்- புதுச்சேரி இடையே பேருந்துகள் இயக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதில் , இ-பாஸ் இன்றி பயணம் செய்யலாம் என்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பிற மாநிலங்களுக்கு பேருந்து சேவையை தொடங்கும் திட்டம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . கொரோனா பரவல் காரணமாக கடந்த 7  மாதங்களுக்கு மேலாக தமிழகம்- புதுச்சேரி இடையே பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. புதுச்சேரி அரசு வேண்டுகோள் விடுத்தததை தொடர்ந்து தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

 

 

Join our channel google news Youtube