விரைவில் தண்டனை கிடைப்பது உறுதி -“திஷா” காவல் நிலையத்தை தொடங்கி வைத்த ஆந்திர முதல்வர் பேச்சு

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கோதாவரி மாவட்டத்தில் “திஷா” காவல் நிலையத்தை  தொடங்கி வைத்தார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் சமீபத்தில்  பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்து என்கவுண்டர் செய்தனர்.பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 10-வது நாளில் குற்றவாளிகளை  என்கவுண்டர் செய்தது. பலரும் ஆதரவும் கொடுத்தனர். சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.  என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்தார். மேலும் தெலுங்கானா போலீசாரையும் பாராட்டினார்.

எனவே பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறையவும் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ஆந்திரமாநில அரசு புதிய சட்டத்தை கொண்டுவர முடிவு செய்தது.இதை தொடர்ந்து ஆந்திர சட்டசபையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி , பாலியல் வன்கொடுமை செயல்களில் ஈடுபடுவர்களை விசாரணை நடத்தி 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை கொடுக்க ஒரு புதிய சட்டம்  இயற்றப்படும் என்று தெரிவித்தார்.

பின்  ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தனர். இதை தொடர்ந்து  ஆந்திர சட்டசபையில் ஆந்திர பிரதேச திஷா சட்டம் என பெயர் வைக்கப்பட்ட இந்த புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.இந்த சட்டம் பாலியல் வழக்குகளை 14 நாட்களுக்குள் விசாரித்து 21 நாட்களுக்குள் தண்டனை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கோதாவரி மாவட்டத்தில் “திஷா” காவல் நிலையத்தை தொடங்கி வைத்தார். இது  குறித்து அவர் பேசுகையில்,வரலாற்று சிறப்புமிக்க  சட்டங்களில் ஒன்று திஷா’ சட்டம் .இந்த சட்டமானது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு  விரைவாக தண்டனை கிடைப்பதை  உறுதி செய்கிறது என்று தெரிவித்தார்.