சவால் விடுத்த அமித் ஷா..! விவாதம் நடத்த பிரதமர் மோடி தயாரா ? ப.சிதம்பரம் ட்வீட்

  • குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
  • நான் கூறியது போல குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக 5 விமர்சகர்ளுடன் விவாதம் நடத்த பிரதமர் மோடி தயாரா  என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.எனவே மத்திய அரசு இந்த சட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகின்றது.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் பேசினார்.அவர் பேசுகையில்,இந்த சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் திட்டமிட்டு தவறான செய்தியை பரப்பி வருகிறது.இந்த சட்டம்  குறித்து என்னுடன் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி,  பகுஜன் சமாஜ் கட்சி  தலைவா்  மாயாவதி,சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்,மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி  உள்ளிட்டோர் தயாரா என்று சவால் விடுத்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதாமாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும் ,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  உள்துறை அமைச்சர் எதிர்கட்சிகள் தன்னுடன் குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி விவாதம் நடத்த தயாரா என சவால் விடுத்துள்ளார்.ஆனால் கடந்த டிசம்பர் 12ம் தேதி முதல் இதைத்தான் எதிர்கட்சிகள், மாணவர்கள், சட்ட வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.ஏற்கனவே நான் கூறியது போல குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக 5 விமர்சகர்ளுடன் விவாதம் நடத்த பிரதமர் மோடி தயாரா  என்று கேள்வி எழுப்பிய அவர் , விவாதத்தை மக்கள் நேரலையில் பார்த்து முடிவு செய்யட்டும்  என்றும் தெரிவித்துள்ளார்.