ஓராயிரம் முறை நான் விவசாயி என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன் – முதலமைச்சர் பழனிசாமி

தமிழக விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வேளாண் சட்டத்தை அரசியலாக்குவதா ? என்று முதலமைச்சர் பழனிசாமி  கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட விவசாயிகள் தொடர்பான, அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 மற்றும் விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020 ஆகிய 3 மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.அவரது அறிக்கையில்,மத்திய பா.ஜ.க. அரசின் இந்த விவசாயிகள் விரோதச் சட்டங்களுக்கு மண்டியிட்டு முதல்வர் ஆதரவளித்து விவசாயிகளின் நலன் குறித்து, கொஞ்சம் கூட இரக்கமின்றி நடந்து கொண்டிருக்கிறார்.முதலமைச்சர் அவர்களை நான் ஒன்றே ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன்; இனியொரு முறை மேடைகளில் நின்று “நான் ஒரு விவசாயி” என்று மட்டும் சொல்லாதீர்கள் “ப்ளீஸ்” என தெரிவித்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,மக்களவையில் நிறைவேறி உள்ள சட்டங்களால், தமிழக விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைத்து நன்மை பயக்கும்.இந்த சட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் எந்த ஷரத்துகளும் இல்லை. அதை நன்கு உணர்ந்ததால் தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஓராயிரம் முறை நான் விவசாயி என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.தமிழக விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வேளாண் சட்டத்தை அரசியலாக்குவதா?  என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.