கேரளாவில் நாணயத்தை விழுங்கிய 3வயது குழந்தை , பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்ததால் சிகிச்சை மறுப்பு.!

கேரளாவில் நாணயத்தை விழுங்கிய 3 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று அதிகமுள்ள கன்டோன்மென்ட் பகுதியில் இருந்து வந்ததால் சிகிச்சை அளிக்க மறுத்ததாகவும் குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கேரளாவில் ஆலுவா பகுதியை சேர்ந்த நந்தினி மற்றும் ராஜூ தம்பதியரின் 3 வயது மகனான பிருத்விராஜ் நாணயத்தை தெரியாமல் விழுங்கியுள்ளார். உடனடியாக பெற்றோர்கள் சிறுவனை ஆலுவா தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, மருத்துவர் இல்லை என்று கூறி எர்ணாகுளம் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் அதே போன்று மருத்துவர் இல்லை என்று கூற ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறியுள்ளனர். அதனையடுத்து குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் இருக்கும் நாணயம் வாழைப்பழத்தையும், தண்ணீரையும் கொடுத்தால் இறங்கும் என்றும், அடுத்து குழந்தை மலம் கழிக்கும் போது நாணயம் வெளியே சென்று விடும் என்றும் கூறி குழந்தையை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளனர்.

இந்த நிலையில் குழந்தையின் தாயார், குழந்தை நாணயம் விழுங்கியதை மருத்துவர்கள் தீவிரமாக எடுக்கவில்லை என்றும், கொரோனா அதிகமுள்ள கன்டோன்மென்ட் பகுதியில் இருந்து சென்றதால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மறுத்ததாகவும் கூறி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்த ஆலுவா தாலுகா மருத்துவமனை அதிகாரி, குழந்தைக்கு சிகிச்சை செய்யும் குழந்தை அறுவை சிகிச்சை மருத்துவர் இல்லாத காரணத்தால் எர்ணாகுளம் பொது மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும், சாதரணமாக எக்ஸ்ரே எடுக்கும் போது கன்டோன்மென்ட் பகுதியில் இருந்தா வருகிறீர்கள் என்று கேட்டதாகவும் கூறியுள்ளார். அதனையடுத்து எர்ணாகுளம் பொது மருத்துவமனை அதிகாரி கூறியதாவது, குழந்தையின் சிறுகுடலில் சிக்கியிருந்த நாணயத்தை அகற்றுவதற்கான கேஸ்ட்ரோ சர்ஜன் இல்லாததால் ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரை செய்ததாக தெரிவித்தார்.