51 நாட்களுக்கு பிறகு இன்று பயணிகள் ரயில்கள் இயக்கம்

51 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பயணிகள் ரயில்கள் தொடங்க உள்ளது.

கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் 21 நாள்களுக்கு அதாவது ஏப்ரல் 14 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் மே 03 -ம் தேதி வரை ஊரடங்கு  நீடிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தாக்கம் குறையாததால் வருகின்ற 17-ம் தேதி வரை ஊரடங்கு   நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் அனைத்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பின் ஊரடங்கில் பல  தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து  பிற மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல கடந்த 1-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள்  இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சகம் நேற்று முன்தினம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், பயணிகள் ரயில் படிப்படியாக தொடங்கப்படும் என அறிவித்தது.

முதற்கட்டமாக மும்பை, பெங்களூரு, சென்னை உட்பட 15 நகரங்களுக்கு இன்று முதல் ரயில் இயக்கப்படும் என்றும்  இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு முன் முழுமயான பரிசோதனை நடத்தப்பட்டு பின்னர் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த, சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நேற்று மாலை 4 மணிக்கு முன்பதிவு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால்,   ரயில்களுக்கான முன்பதிவு 6 மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு வெளியிட்டது.

இந்த முன்பதிவை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் மட்டுமே  செய்யமுடியும் என  ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயங்கவுள்ளன.

author avatar
Dinasuvadu desk