4 முதலமைச்சர்களுக்கு தர்ணா போராட்டம் நடத்தும் கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதி மறுப்பு!

டெல்லி அரசுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றுகூறி, முதலமைச்சர் கெஜ்ரிவால் கடந்த 7 நாட்களாக தனது அமைச்சர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்த அவர்கள், ஆந்திர பவனில் நேற்று மாலை சந்தித்து முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர்.

பின்னர், டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு அவர்கள் அனுப்பிய கடிதத்தில், கெஜ்ரிவால் விவகாரம் தொடர்பாக அவரிடம் பேச விரும்புவதாக குறிப்பிட்டிருந்தனர். ஆனால் அவர்களை சந்திக்க துணைநிலை ஆளுநர் மறுத்துவிட்டார்.

அதேபோன்று, கெஜ்ரிவாலை சந்திக்க 4 மாநில முதலமைச்சர்களுக்கு போலீசாரும் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற நால்வரும், அவரது மனைவியிடம் நிலைமையைக் கேட்டறிந்தனர்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய மம்தாபானர்ஜி, குமாரசாமி, பினராயி விஜயன், சந்திரபாபு நாயுடு ஆகியோர், டெல்லி விவகாரத்தில் பிரதமர் மோடி நேரில் தலையிட வேண்டும் என வலியுறுத்தினர்.

நிதி ஆயோக் கூட்டத்தின்போது பிரதமரிடம் நேரில் முறையிட இருப்பதாகவும் அவர்கள் கூறினர். அரசியல் அமைப்பு சட்டத்தை மோடி அரசு மதிக்கவில்லை எனவும், கூட்டாட்சி முறையைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயற்சிப்பதாகவும் 4 மாநில முதலமைச்சர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment